தமிழக கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள்
தமிழக கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் The Hindu
தலையங்கம்

சகல தொழிலாளருக்கும் சம உரிமைகள் சேரட்டும்!

காமதேனு

வட மாநில தொழிலாளர்களை முன்வைத்து இந்திய அளவில் உருவான பதற்றம் தமிழகத்துக்கு பல படிப்பினைகளை தந்திருக்கிறது. வட மாநிலத்தவர் மட்டுமல்ல... தமிழ்நாட்டின் தொழிலாளர்களை மனதில் வைத்தும், மாநில அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகளையும் இந்தப் பிரச்சினை வலியுறுத்துகிறது.

வட மாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார்கள் நிலவி வருகின்றன. உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைக்காமல் போவதால், வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறோம் என்று முதலாளிகள் சமாளிக்கிறார்கள். உள்ளூராரைவிட வட மாநில தொழிலாளர்கள் குறைவான கூலிக்கு உடன்படுவதே, அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதற்கு காரணம் என்றும் இன்னொரு தரப்பில் சொல்கிறார்கள்.

இதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்களுக்கான பணிவாய்ப்பு பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வட மாநிலத் தொழிலாளர்களிடம் உழைப்புச் சுரண்டல் பகிரங்கமாக நடப்பதும் தெரிய வருகிறது. உள்ளூராரோ, வெளி மாநிலத்தவரோ அனைவரும் ஒரே உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கான உரிமைகள் மற்றும் அடிப்படையான அனுகூலங்களை உறுதி செய்வது அரசின் கடமை.

உழைக்கும் மக்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா, எத்தனை மணி நேரம் பணிபுரிகிறார்கள், தொழிலாளர்களுக்கான இதர உரிமைகள் மற்றும் பணியிட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா... என்பதை எல்லாம் தொழிலாளர் நலத்துறை உள்பட அரசின் பல்வேறு கரங்கள் வாயிலாக உறுதி செய்தாக வேண்டும். உழைக்கும் தொழிலாளர்கள் வட இந்திய சகோதரர்களாக இருப்பினும், சட்டப்படியான தொழிலாளர் நலன்கள் அவர்களுக்கு முறையாக சென்று சேர்வதை கண்காணிக்க வேண்டும்.

தொழிலாளர்கள்

தொழிலாளர் நலத்துறையின் இந்த நடவடிக்கையின் வாயிலாக, தமிழக மற்றும் வட இந்திய தொழிலாளர்கள் குறித்தான திட்டவட்ட தரவுகளை திரட்டுவதும் சாத்தியமாகும். இவை தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் சென்று சேர துணை செய்யும். மேலும், வெளியார்களில் சந்தேக நபர்கள் கலந்திருப்பின், அவர்களை அவசியமெனில் கண்காணிக்கவும் காவல்துறைக்கு உதவும்.

முறையான ஊதியமும், இன்ன பிற பலன்களும் சரியாக கிடைப்பின், தமிழக தொழிலாளர்கள் வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு சென்று சிரமப்படுவது கணிசமாக குறையும். பிழைப்புக்காக கடல்கடந்து செல்லும் தமிழகத்தின் கூலி தொழிலாளர்களும், இங்கே அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களும், சில தருணங்களில் வாழ்வாதார பிரச்சினைகளை விட மோசமாகி விடுகின்றன. வார இறுதியிலேனும் குடும்பத் தலைவர் தமது சொந்தங்களோடு சேர்ந்திருப்பது, அவருக்கு மட்டுமன்றி, குழந்தை வளர்ப்பு முதல் குடிமக்களின் வாழ்க்கைத் தரம் வரை பலவகையிலும் நன்மை சேர்க்கும்.

எனவே, உழைப்பாளர்களின் பின்புலம் எந்த திசையில் இருப்பினும், மண்ணில் சிந்தும் அவர்களின் வியர்வைக்கு உரிய மரியாதை சேரட்டும். சகல தொழிலாளருக்கும் உரிமைகள் சென்று சேர்வதற்கான நடைமுறை சாத்தியங்களை, மத்திய அரசுடன் கைகோத்து மாநில அரசு முன்னெடுக்கட்டும்!

SCROLL FOR NEXT