மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு The Hindu
தலையங்கம்

சாத்தியமாகட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு!

காமதேனு

அவ்வப்போது எழுந்தடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை, இப்போதும் எழுந்திருக்கிறது. தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்போடு இணைந்த சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்தவர்கள், தற்போது பிஹார் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் சாதியை வளர்ப்பதல்ல. ஆனால், முறையான, தெளிவான இடஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். அந்த கணக்கெடுப்புக்கு சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக சுணக்கம் நிலவி வருகிறது.

1931-ல் காலனியாதிக்க ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவை தொடரவும் முடிவானது. ஆனால், அடுத்த பத்தாம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரை காரணமாக்கி கணக்கெடுப்பு நடைமுறை தள்ளிப்போனது.

சுதந்திர இந்தியாவின் 1951-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதும் அதன் சாதிவாரி முடிவுகள் வெளியாகவில்லை. குறைபாடுகள் நிறைந்திருப்பதாகக் கூறி பாஜக ஆட்சியிலும் அவை வெளியிடப்படவில்லை. தற்போது வரை சாதிவாரி கணக்கெடுப்புக்கு, மத்தியில் ஆளும் அரசுகள் மசிந்தபாடில்லை.

கணக்கெடுப்பு

பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர் வரிசையில் இருக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்புவதும், அவை ஆட்சிக்கு வந்த பிறகு மறுதலிப்பதும் தொடர்கிறது. சாதிவாரி கணெக்கெடுப்பின் முடிவுகள் வெளியானால், தற்போதிருக்கும் இடஒதுக்கீட்டு விகிதங்களை அவை திருத்தியமைக்கக் கோரலாம். அதிக விகிதம் கொண்டோர் அதற்காக கோருவதும், குறைய வாய்ப்புடையோர் அதை விட்டுத்தர இயலாதும் போராட்டத்தில் இறங்குவார்கள். இந்த சச்சரவுகளை எதிர்கொள்வானேன் என்பது உள்ளிட்ட காரணங்களினால் ஆளும்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்புகளை தள்ளிப்போட முயற்சிக்கின்றன. மற்றபடி சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்தே இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் அனைத்துமே சமூகநீதிக்காக பாடுபடுவதாக மார்தட்டிக்கொள்கின்றன. இதுகாறும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அவை சேர உதவுவதே உண்மையான சமூகநீதியாக இருக்கும். இடஒதுக்கீட்டின் பெயரால் சமூகநீதியை நிலைநிறுத்தியதாக கூறுவோரும், சாதிவாரி கணக்கெடுப்பு என்றதும் அமைதி காக்கிறார்கள் அல்லது தள்ளிப்போட முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிர்தரப்பினரோ, சாதியை ஒழித்தாக வேண்டிய சமூக நோக்கத்துக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா எனவும் வாதிடுகின்றனர். சில வழக்கு விசாரணைகளில் நீதிமன்றங்களும் இதே கேள்வியை எழுப்பியுள்ளன.

பெருந்தொற்று பரவலின் மத்தியில், கரோனா ஒழியட்டும் என்று முழக்கமிட்டு நாம் வாளாவிருக்கவில்லை; மருத்துவ சிகிச்சை முதல் தடுப்பூசி வரை பெரும் மருத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தோம். அதுபோல சமூக நோயான சாதியை ஒழிக்க, இடஒதுக்கீடும் அதற்கு அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பும் அவசியம். இடஒதுக்கீட்டு முறையால் குறிப்பிட்ட தரப்பினரே சகல சகாயங்களையும் அடைகிறார்கள் என்ற குரலுக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு விடை தர வாய்ப்புண்டு.

கரோனா காரணமாக தாமதமான 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பாஜக ஆதரவாளர்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே, மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இனியும் கேள்விக்குறியே!

கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அண்மை ஆண்டுகளாக விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் அதனை முன்வைத்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பாமக போராட்டத்தில் குதித்தபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். தற்போது ஆட்சியிலிருக்கும் திமுக, சமூகநீதிக்கே முழுமுதல் முன்னுரிமை என்கிறது.

தற்போது மாநிலங்களே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்க இயலும் என்பதற்கு பிஹார் முன்னுதாரணமானதில், தமிழ்நாட்டில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் அதிகரித்துள்ளன. இவற்றை பரிசீலித்து, அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரலாம். சமூகநீதியை செயல்படுத்துவதில் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழ்நாடு, இதிலும் உதாரணமாக நிற்கட்டும்!

SCROLL FOR NEXT