VEDHAN M
VEDHAN M
தலையங்கம்

அதிக அபராதம் சரிதான்; ஆனால் அதுமட்டும் போதுமா?

காமதேனு

சாலை விதிகளை மீறுபவர்களிடம் அதிக அளவிலான அபராதத் தொகை வசூலிக்கப்படுவதாகப் பொதுவெளியில் எழுந்திருக்கும் பேச்சு கவனம் பெறுகிறது. விபத்துகளைக் குறைக்க இது வழிவகுக்கும் என அரசுத் தரப்பும், அதற்காக இவ்வளவு அதிகமான தொகையை வசூலித்தால் எங்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என சாமானியர்களும் வாதிடுகிறார்கள். உண்மையில், இவ்விஷயத்தில் விவாதிக்கப்பட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைத் தற்போதுதான் அமல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. இதன்படி, இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாதவர்கள் முதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வரை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் பல மடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக, சாலையில் பைக் ரேஸ் போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் முதல் முறை 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை அதே தவறைச் செய்தால் 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாதது, அநாவசியமாக ஒலிப்பான்களைப் பயன்படுத்துவது எனப் பல தரப்பட்ட விதிமீறல்களுக்கு அபராதத் தொகையை அதிகமாக வசூலிப்பது நியாயமானதுதான். சாலையில் செல்லும்போது சக மனிதர்களின் உயிர்கள் குறித்த அக்கறை இல்லாமல் அலட்சியமாக நடந்துகொள்பவர்கள், இப்படியான அபராதம் குறித்த அச்சம் இருந்தால்தான் அடங்குவார்கள்.

நாடு முழுவதும் வாகன விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், சாலையில் வாகனங்களால் ஏற்படும் நெரிசலும் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இப்படியான சூழலில் விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க அபராதத் தொகையை அதிகரிப்பது சரியானது என்றே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கருதுகிறது. இதுவும் நியாயமானதுதான்.

ஆனால், அபராதத் தொகையை அதிகரிப்பதால் மட்டும் விபத்துகளும் விதிமீறல்களும் குறைந்துவிடுமா என்பது முக்கியமான கேள்வி.

மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வாகனங்களும் அதிகரிக்கும்; அதற்கேற்ப சாலை வசதிகளையும் பொதுப் போக்குவரத்தையும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு வர வேண்டும். அதற்குத் தொலைநோக்குப் பார்வை, துல்லியமான திட்டமிடல், காலமாற்றங்களுக்கு ஏற்ப நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது என ஏராளமான அம்சங்கள் அவசியம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் போன்ற வசதிகளை அரசு ஏற்படுத்தித் தரவே செய்கிறது. ஆனால், அவையெல்லாம் பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில், துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதும் அவசியம் அல்லவா!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்றே இதுபோன்ற மெத்தனத்துக்கு உதாரணம். இப்படியான இழப்புகளைத் தவிர்க்க, இதுபோன்ற பணிகளின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏன் கவனம் செலுத்தப்படுவதில்லை?

கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும்கூட இன்னமும் போதிய சாலை வசதி இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை எத்தனையோ பேர் அன்றாடம் அவஸ்தைப்படுவதைப் பார்க்கிறோம். அதுகுறித்த புகார்கள் முதல்வர் கவனத்துக்குச் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாததற்கான சமீபத்திய உதாரணங்களும் இருக்கின்றன. பேருந்து படிக்கட்டிலிருந்து மாணவர்கள் தவறிவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வதன் பின்னணியில், அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப போதுமான பொதுப்போக்குவரத்து அதிகரிக்கப்படவில்லை எனும் உண்மை உறைக்கிறதுதானே?!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் விஷயத்தைப் பொறுத்தவரை, மக்களிடம் மட்டுமா பிரச்சினை இருக்கிறது? மதுக் கடை விற்பனை நேரத்தைக் குறைப்பது, மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, மதுவால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை முழுவீச்சில் ஏற்படுத்துவது என அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. மழைநீர் தேங்கும் சாலைகள் இல்லாத ஊர் தமிழகத்தில் எங்குமே இல்லை எனும் நிலைதானே நீடிக்கிறது. மழைப் பருவம் அல்லாத காலத்தில் அதற்கான பணிகளை நிறைவுசெய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாமே!

கூடுதல் அபராதம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தமிழகத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஏற்கெனவே, விதிமீறல்கள் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் காவலர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, கையூட்டு பெறுவது குறித்த புகார்கள் உண்டு. ஒழுங்குமுறையும் கண்காணிப்பும் இருந்தால்தான் அந்தப் பிரச்சினைகளைக் களைய முடியும்.

மொத்தத்தில் விபத்துகளைக் குறைப்பது என்பது ஒருவழிப் பாதை அல்ல. அது பல தரப்பினரும் தத்தமது கடமைகளை முறையாகச் செய்து, தவறுகளைத் திருத்திக்கொண்டு, சட்டத்தின்படி நடந்துகொள்வதால்தான் முழுமையாகச் சாத்தியமாகும். அதிக அபராதத் தொகை வசூலை அதற்கான முதல் படியாக எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த பணிகளைச் சம்பந்தப்பட்டவர்கள் சரியாகத் திட்டமிட்டு நிறைவேற்றுவார்கள் என்றும் நம்புவோம்!

SCROLL FOR NEXT