பாக். பிரதமர் இம்ரான்கான், லதா மங்கேஷ்கர்
பாக். பிரதமர் இம்ரான்கான், லதா மங்கேஷ்கர் 
சர்வதேசம்

“சிறந்த பாடகியரில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது” -பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்

காமதேனு

“லதா மங்கேஷ்கரின் மறைவால், உலகம் அறிந்த சிறந்த பாடகியரில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு 92 வயது. அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 8-ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சரத் பவார், சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். முப்படை, காவல் துறை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழுங்க லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சரித்திரம் முடிவுக்கு வந்துள்ளது. லதாமங்கேஷ்கர் ஒரு மெல்லிசை ராணி. பல பத்தாண்டுகளாக இசை உலகை ஆண்டவர். அவர் இசையின் முடிசூடா ராணி. அவரது குரல் இனிவரும் காலங்களிலும் மக்களின் இதயங்களை ஆட்சி செய்யும்” என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது இரங்கல் பதிவில், “லதா மங்கேஷ்கரின் மறைவால், உலகம் அறிந்த சிறந்த பாடகியரில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது. இவரது பாடல்களைக் கேட்பது உலகம் முழுதும் உள்ள பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT