சர்வதேசம்

இரண்டாம் உலகப் போரைவிட மிக மோசமான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்: ஐநா எச்சரிக்கை

காமதேனு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 1,179 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும், இதைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும் என்றே கருதப்படுகிறது. ஏறத்தாழ 1 கோடி பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். இவர்களில் 38 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கும் நிலையில், மற்றவர்கள் உள்நாட்டிலேயே வீடிழந்து அகதிகளாகியிருக்கிறார்கள் என்கிறது அகதிகளுக்கான ஐநா ஆணையம்.

இந்தப் போரின் விளைவாகக் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலையும் உக்ரைன் எதிர்கொண்டிருக்கிறது. அது உலகளாவிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் அச்சம் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாகப் பேசியிருக்கும் ஐநா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், பேரழிவின் மீது பேரழிவை ஏற்படுத்திவருகிறது. இதன் உலகளாவிய தாக்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமாக இருக்கும். ஏனெனில், உலகத்துக்குக் கணிசமான அளவில் கோதுமையை விளைவிக்கும் உக்ரைன் விவசாயிகள் தற்போது ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT