சர்வதேசம்

போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கும் அஞ்சலி செலுத்தணும்! : நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த எம்.பியின் குரல்!

காமதேனு

போரில் இறந்த படையினருக்கு மரியாதை செலுத்தும் நேரத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்தவேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் இன்று பேசுகையில்," வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில், போரில் பலியான படையினருக்கு மாியாதையைச் செலுத்துகிறேன். அதேநேரம், தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு இறந்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். அரசியல் வாழ்க்கையில் நான் அதிகமாக விமர்சித்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், சர்வதேச அளவில் அவர் நற்பெயரைக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தின் 225 பேர் செய்ய முடியாத சர்வதேச செல்வாக்கை, அவர் பெற்றிருக்கிறார். எனவே, அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், " இன்று நாட்டில் பொதுமக்கள் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல. எனவே, அந்த உணவகத்தை உடனடியாக மூட வேண்டும். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT