சர்வதேசம்

‘இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகின்றன’ – பப்ஜி, டிக்டாக்கைத் தடை செய்யும் தாலிபான்கள்

காமதேனு

பப்கி, டிக்டாக் போன்ற செயலிகள் ஆப்கன் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் தாலிபான் ஆட்சியாளர்கள், அவற்றை விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சியமைத்த தாலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறி 2.3 கோடி இணையதளங்களை சமீபத்தில் தாலிபான் அரசு தடை செய்தது. அது மட்டுமல்ல, இசை, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், வீடியோக்களைப் பகிரும் செயலியான டிக்டாக், வீடியோ கேப் செயலியான பப்ஜி ஆகியவற்றின் மீதும் தாலிபான் ஆட்சியாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இரு செயலிகளையும் தடை செய்வது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே, தாலிபான் அரசு எச்சரிக்கை விடுத்தது. இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என தாலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் இனாமுல்லா சமாங்கனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷரியத் சட்ட அமலாக்க நிர்வாகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட சமீபத்திய கூட்டத்தில், இந்த இரு செயலிகளையும் தடைசெய்வது குறித்த அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உரிய கால அவகாசத்துக்குள் இரு செயலிகளையும் தடை செய்யுமாறு தகவல் தொடர்புத் துறைக்கும் இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் தாலிபான அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதையடுத்து அடுத்த 90 நாட்களில் இரு செயலிகளும் தடைசெய்யப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT