சர்வதேசம்

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றனவா? என்ன சொல்கிறார் மகிந்த?

சந்தனார்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், மக்களின் இடைவிடாத போராட்டத்தால், தற்காலிகமான தீர்வையாவது எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்நாட்டு அரசு இருக்கிறது. குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை வலுத்திருக்கிறது. இந்நிலையில், அதிபரின் நிர்வாக அதிகாரங்களைக் குறைக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவர பிரதமர் மகிந்த ராஜபக்ச பரிந்துரைத்திருக்கிறார்.

இலங்கையில், சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, காலத்துக்கு ஏற்ற தேவையான திருத்தங்களுடன் 19-வது சட்டத்திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது, உறுதியான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அடித்தளத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதன் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

முக்கிய சட்டத்திருத்தங்கள்

2010-ல் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த 18-வது சட்டத்திருத்தம், அதிபருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக, அதிபர் பதவிக்கு ஒருவர் இரு முறைதான் போட்டியிட முடியும் எனும் ஷரத்தை நீக்கிவிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனும் நிலையை உருவாக்கியது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய ஆணையங்கள் அதிபரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

2015-ல் பதவியேற்ற மைதிரிபால சிறிசேனா, 19-வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன் மூலம் அதிபருக்கான கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் அம்சங்கள் நீக்கப்பட்டு, பிரதமருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கும் சுதந்திரமான ஆணையங்களுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் அம்சங்களும் 19-வது சட்டத்திருத்தத்தால் சாத்தியமாகின.

இந்தச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ராஜபக்ச சகோதரர்கள் வலியுறுத்திவந்தனர். 2019 நவம்பரில் அதிபராகப் பதவியேற்ற கோத்தபய, 2020 அக்டோபரில் 20-வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதில், பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதிபர் அலுவலகத்துக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, அதிபர் கோத்தயபவின் தன்னிச்சையான முடிவுகள் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே, அவர் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்துவருகிறது.

இந்தச் சூழலில், பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 19-வது சட்டத்திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தும் வகையில் ஒரு மசோதாவை அடுத்த வாரம் தாக்கல் செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.

SCROLL FOR NEXT