ஏமனில் அமெரிக்கா - பிரிட்டிஷ் படை வான் வழி தாக்குதல் 
சர்வதேசம்

ஏமனில் அமெரிக்கா - பிரிட்டிஷ் வான்வழித் தாக்குதல்: பலர் கொல்லப்பட்டதாக தகவல்

வ.வைரப்பெருமாள்

ஏமனில் அமெரிக்க - பிரிட்டிஷ் படையினர் கூட்டு விமானத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏமன் தலைநகர் சனா மற்றும் ஒரு முக்கிய துறைமுக நகரம் உட்பட அந்நாட்டின் பல்வேறு தளங்களில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை அமெரிக்கா - பிரிட்டிஷ் படையினர் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனாவிலும், துறைமுக நகரமான ஹொடைடாவிலும் பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனில் அமெரிக்கா - பிரிட்டிஷ் ராணுவம் விமானத் தாக்குதல் (கோப்புப்படம்)

ஹுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் அல்-மசிரா வெளியிட்டுள்ள தகவலில், டேஸ் நகரில் உள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பிராந்திய ஊடகங்களின் சுயாதீனமான விசாரணையில் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 'செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதலை மட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகளுடன் கூட்டு நடவடிக்கையில் பிரிட்டிஷ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் பகுதியில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஹுதி கிளர்ச்சியாளர்கள்

அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களையும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக கடந்த ஜனவரி முதல் ஏமனில் உள்ள ஹுதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும் இந்த தாக்குதல் ஹுதி கிளர்ச்சியாளர்களை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.

ஹுதி கிளர்ச்சியாளர்கள்

தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக கிரேக்க நாட்டு கப்பல் மற்றும் இதர கப்பல்களை தாக்கியதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT