சர்வதேசம்

‘வணக்கம் ஏலியன்... பூமியிலிருந்து!’ - விண்வெளிக்கு மீண்டும் செய்தி அனுப்பும் விஞ்ஞானிகள்

காமதேனு

வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா எனும் ஆர்வம் சாமானியர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை பலருக்கும் இருக்கிறது. நிலவில் மனிதன் கால்பதித்த நிகழ்வுக்குப் பின்னர் இவ்விஷயத்தில் முக்கியமான முன்னெடுப்பை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான புவெர்ட்டோ ரிக்கோவில் அமைக்கப்பட்டிருந்த ஆரசிபோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி, விண்வெளிக்கு செய்தி அனுப்பப்பட்டது. 1974 நவம்பர் 16-ல், அந்த தொலைநோக்கியின் மூலம் உயிர் வாழ்வதற்கான அடிப்படை வேதி அமைப்புகள், டிஎன்ஏ-வின் அமைப்பு, சூரியக் குடும்பத்தில் பூமி எந்த இடத்தில் இருக்கிறது எனும் விவரம், ஒரு மனித உருவம் போன்றவை அடங்கிய 210 பைட்ஸ் (bytes) அளவு கொண்ட குறுஞ்செய்தியை விஞ்ஞானிகள் அனுப்பினர். 22,200–25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கிளஸ்டர் எம்-13 எனும் நட்சத்திரக் கூட்டத்தை எட்டும் வகையில் அதிர்வெண் பண்பேற்றப்பட்ட ரேடியோ அலைகள் மூலம் அந்தச் செய்தி அனுப்பப்பட்டது. கோர்னெல் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை பேராசிரியர் ஃப்ராங் டிரேக், கார்ல் சேகன் எனும் இயற்பியலாளருடன் இணைந்து, அதை வடிவமைத்தார்.

ஆரசிபோ தொலைநோக்கி

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையென்றால், அவர்கள் அதை வைத்து பூமியைப் பற்றி அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் எனும் நோக்கத்தில் அதை விஞ்ஞானிகள் அனுப்பினர். எனினும், இந்தச் செய்தி சென்று சேரவே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் ஆகும்.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற முயற்சியில் ஜெர் ப்ரொபல்ஷன் லேபரட்டரி இறங்கியிருக்கிறது. ‘விண்மீன் மண்டலத்தில் ஒரு கலங்கரை விலக்கம்’ (பீகன் இன் தி கேலக்ஸி - Beacon in the Galaxy) எனும் பெயரில் இந்தத் திட்டம் உருவாகிறது. சூரியக் குடும்பம், பூமியின் மேற்பரப்பு, மனித உருவம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரேடியோ தகவல்களை டிஜிட்டல் வடிவில் உருவாக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் குயிசூ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘ஃபாஸ்ட்’ (Five-hundred-meter Aperture Spherical radio Telescope) தொலைநோக்கியிலிருந்தும், செடி (SETI) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆலன்ஸ் டெலஸ்கோப் அர்ரே எனும் தொலைநோக்கியிலிருந்தும், பால்வெளி மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு இந்தச் செய்தி அனுப்பப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நமது பால்வெளி மண்டலத்திலேயே, உயிர்கள் வாழத்தக்கவை என 5,000-க்கும் மேற்பட்ட கோள்களை நாசா கண்டறிந்திருக்கிறது. எனினும், இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து இதுதொடர்பாக மேலும் ஆய்வு நடத்துவது சாத்தியமற்றதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற முயற்சிகள் மூலம் பூமி குறித்த தகவல்கள் விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

SCROLL FOR NEXT