சர்வதேசம்

ஹவாய் தீவில் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத்!

காமதேனு

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹவாய் தீவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். இதில் உக்ரைன் போர் நிலவரம், எண்ணெய் இறக்குமதி, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் ஆகியோரிடம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் முக்கியமான பேச்சுவார்த்தை இது.

இந்நிலையில், அமெரிக்கப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று வாஷிங்டனிலிருந்து ஹவாய் தீவுக்குச் சென்றிருக்கிறார் ராஜ்நாத் சிங். அத்தீவின் தலைநகரான ஹானோலுலுவுக்குச் சென்றிருக்கும் ராஜ்நாத் சிங், அமெரிக்க இந்தோ பசிபிக் ஆயுதப் படை தலைமையகத்தை (USINDOPACOM) பார்வையிட்டார். அமெரிக்க இந்தோ பசிபிக் ஆயுதப் படையும் இந்திய ராணுவமும், ராணுவ ஒத்திகைகள், பயிற்சிகள், பரிமாற்றங்கள் எனப் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன.

இந்தப் பயணத்தின்போது, இன்று (ஏப்.14) ஹானோலுலுவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ராஜ்நாத் சிங், அது குறித்த தகவலை ட்விட்டரிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT