மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச 
சர்வதேசம்

மகன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்… அடுத்து ராஜபக்ச: இலங்கையில் வெடிக்கும் வன்முறை!

காமதேனு

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோட விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவரது மகன் யோஷித ராஜபக்ச நேற்றே வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த ஒரு மாதமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கை முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.

அமைதியாகப் போராடிய மக்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யோஷித ராஜபக்ச

இந்த நிலையில், நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதும் கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT