ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின் 
சர்வதேசம்

கொலை முயற்சியில் உயிர் தப்பிய புதின்: யார் போட்ட திட்டம்?

சந்தனார்

உக்ரைன் போர் தொடங்கி சில நாட்களில் ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல சதி நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவலை உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவரே வெளியிட்டிருக்கிறார். புதினின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவரும் நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக, உக்ரைனிலிருந்து வெளிவரும் ‘உக்ரைன்ஸ்கா ப்ரவ்டா’ எனும் இதழுக்குப் பேட்டி அளித்திருக்கும் உக்ரைன் பாதுகாப்புத் துறை உளவு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ், பல முக்கியத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி சில நாட்களில், கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் உள்ள காகசஸ் எனும் இடத்தில் இந்தக் கொலை முயற்சி நடந்ததாகக் கூறியிருக்கும் அவர், இந்த முயற்சியின்போது ககாகஸைச் சேர்ந்த சிலரால் புதின் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். “இது முற்றிலும் தோல்வியடைந்த முயற்சி. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது. இது ஒரு தனிப்பட்ட தகவல்” என்று அவர் கூறியிருக்கிறார். புடானோவ் அளித்த முழுமையான பேட்டியும் சற்று முன் வெளியாகியிருக்கிறது.

மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் (இடது)

புதினின் அடிவயிற்றில் உள்ள ஒரு திரவத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரத்தப் புற்றுநோயால் புதினின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பரான ஒரு தொழிலதிபர் கூறியிருக்கிறார்.

அதேசமயம், கொலை முயற்சி குறித்து உக்ரைன் அதிகாரி வெளியிட்ட தகவல் குறித்த உண்மைத்தன்மை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தப் போரில் ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் போர் முடிவுக்கு வருவதுடன் ரஷ்யாவில் ஆட்சி மாற்றமும் ஏற்படும் என்றும் சில வாரங்களுக்கு முன்னர், ஸ்கை நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் புடானோவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT