இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 
சர்வதேசம்

‘பணம் கொடுத்தாலும் எரிபொருள் வழங்க பல நாடுகள் மறுக்கின்றன!’

காமதேனு

எரிபொருள், இயற்கை எரிவாயு, மின்சாரம், உணவுப் பொருள் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டைவிடவும் மிக மோசமான சூழலில் இலங்கை இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்திருக்கிறார். “இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது. முன்பைவிடவும் மிக மோசமான பிரச்சினை இது” என்று நாடாளுமன்ற உரையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த பல மாதங்களாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகிறது. கார்ப்பரேட் வரிகளை வெகுவாகக் குறைத்தது இலங்கையின் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக அமைந்தது. கூடவே, தவறான பொருளாதாரக் கொள்கைகள், எல்லை மீறி வாங்கிய வெளிநாட்டுக் கடன்கள், 2019-ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சுணக்கம், கரோனா பெருந்தொற்று காரணமாகச் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியது, இயற்கை விவசாயம் எனும் பெயரில் அதிபர் கோத்தபய ராஜபக்ச எடுத்த நடவடிக்கையால் வேளாண்மை அழிக்கப்பட்டது, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது, அதன் தொடர்ச்சியாக இறக்குமதி பாதிக்கப்பட்டது எனப் பல்வேறு காரணிகளால் பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது இலங்கையின் பொருளாதாரம். எரிபொருள் முதல் உணவுப் பொருள் வரை எல்லாமே விலையேறிக் கிடப்பதால் மக்கள் கொடும் துயருக்குள்ளாகியிருக்கின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துவிட்ட நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில், தற்போது நிதியமைச்சர் பொறுப்பையும் வகிப்பதால் பொருளாதாரச் சிக்கலிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் சுமையை எதிர்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “தற்போது, சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 700 மில்லியன் டாலர் கடனில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் எந்த நிறுவனமும் நமக்கு எரிபொருள் வழங்க முன்வரவில்லை. ரொக்கப் பணத்துக்கு எரிபொருள் வழங்கக்கூட அந்நாடுகள் மறுக்கின்றன” என்று ரணில் கூறினார்.

அத்துடன், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவந்த சூழலில், முந்தைய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். “ஆரம்பத்திலேயே பொருளாதார வீழ்ச்சியை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாவது எடுக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இப்படி ஒரு கடினமான சூழலை நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம். ஆனால், நாம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்றைக்கு அதலபாதாளத்தில் வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகளைப் பார்க்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிடமிருந்து இதுவரை 4 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலத்துக்கு இந்தியாவால் இலங்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்க முடியாது என்றும் ரணில் கூறியிருக்கிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் வருவாய் மற்றும் வரிவிதிப்புக் குழு, சமீபத்தில் இலங்கை சென்று ஆலோசனை நடத்தியிருக்கிறது. 2019-ல் குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரிகளை மீண்டும் அதிகரிப்பது, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆகியவற்றின் உதவியையும் இலங்கை நாடியிருக்கிறது.

1980-களின் இறுதியில் அதிபர் ரணசிங்கே பிரேமதாசாவின் அமைச்சரவையில் கல்வித் துறை மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பதவிவகித்த ரணில், இலங்கை பங்குச் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தவர். கூடவே, வெளிநாட்டு முதலீடுகளையும் இலங்கைக்குப் பெற்றுத் தந்தவர். பியாகாமா சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக வழிவகுத்தவர். பொருளாதாரம் குறித்த அவரது பார்வை இலங்கைக்குப் பல்வேறு தருணங்களில் உதவியிருக்கிறது. தற்போது அவரது அனுபவம் இலங்கையை மீட்டெடுக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

SCROLL FOR NEXT