சர்வதேசம்

‘இலங்கைக்குச் செய்த உதவியைப் பாராட்டுகிறோம்!’ - நிர்மலா சீதாராமனிடம் சொன்ன ஐஎம்எஃப்

காமதேனு

உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் (ஐஎம்எஃப்), ஜி20, நிதி நடவடிக்கை பணிக்குழு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்றிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள சிந்தனை அமைப்பான அட்லான்டிக் கவுன்சில் சார்பில் நடந்த கூட்டத்திலும் நேற்று அவர் கலந்துகொண்டார்.

உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸைச் சந்தித்துப் பேசவிருக்கும் நிர்மலா சீதாராமன், இந்தோனேசியா, தென் கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், வாஷிங்டன் செல்லும் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரியையும் சந்தித்துப் பேசுகிறார்.

ஏப்ரல் 24-ல் சான் பிரான்சிஸ்கோ செல்லும் அவர், பல்வேறு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் கலந்துரையாடவிருக்கிறார். ஏப்ரல் 27-ல் அவர் நாடு திரும்புகிறார்.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உதவிய இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார் பன்னாட்டு நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா. நேற்று அவரைச் சந்தித்துப் பேசிய நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போது, புவிஅரசியலில் ஏற்பட்டிருக்கும் நகர்வுகள், உலகப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், அதிகரித்துவரும் எரிவாயு விலை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவருடன் நிர்மலா சீதாராமன் கலந்தாலோசித்தார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் இந்தியா வெற்றிகரமாகச் செயல்பட்டதாகப் பாராட்டிய கிறிஸ்டலினா ஜார்ஜிவா, கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில், பலவீனமான நிலையில் இருக்கும் நாடுகளுக்கு இந்தியா அளித்த நிவாரண உதவிகளையும் பாராட்டினார்.

SCROLL FOR NEXT