கரோல் கட்வால்டர்
கரோல் கட்வால்டர் 
சர்வதேசம்

பாலியல் அவதூறு முதல் கொலை மிரட்டல் வரை: பெண் ஊடகர்களுக்கு எதிராக அதிகரிக்கும் ஆன்லைன் வன்முறை!

காமதேனு

பணிக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இன்னல்களும் இன்னமும் முழுமையாகப் பேசப்படவில்லை. இணையம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் (ஐசிஎஃப்ஜே).

பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐசிஎஃப்ஜே நடத்தியிருக்கும் இந்த ஆய்வின் அறிக்கை, சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் பல தகவல்கள், பெண் ஊடகர்கள் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலை எதிர்கொண்டிருக்கின்றனர் என்பதைப் பதிவுசெய்திருக்கின்றன. இந்த ஆய்வில், 15 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகர்கள் பங்கேற்றனர்.

‘தி சில்லிங்’ எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வில், தங்கள் ஊடகப் பணி தொடர்பாக இணையத்தில் வன்முறையை எதிர்கொண்டதாக, நான்கில் மூன்று பங்கு பெண்கள் தெரிவித்திருக்கின்றனர். 25 சதவீதம் பேர், கொலை மிரட்டல் உள்ளிட்ட உடல்ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டதாகவும், 18 சதவீதம் பேர் பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டதாகவும் கூறியிருக்கின்றனர்.

கைக்குழந்தைகள் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உரவினர்களுக்கு எதிராக வன்முறை மிரட்டல்கள் வந்ததாக 13 சதவீதம் பேர் பதிவுசெய்திருக்கின்றனர். 48 சதவீதம் பேர், சமூக ஊடகங்களில் அநாவசியமான குறுக்கீடுகள் மூலம் தொல்லைக்குள்ளாவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்ற புலனாய்வுப் பத்திரிகையாளரான கரோல் கட்வால்டர் எதிர்கொண்ட ஆன்லைன் இன்னல்கள் கூடுதல் அதிர்ச்சி தருபவை. ‘தி கார்டியன்’, ‘அப்செர்வர்’ போன்ற இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கட்வால்டர், 2019 டிசம்பர் முதல் 2021 ஜனவரி வரை மட்டும், இப்படி 10,400 முறை ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டார் என்கிறது இந்த ஆய்வறிக்கை. தனிப்பட்ட முறையிலும், பணி சார்ந்தும் இந்தக் கொடுமைகளை அவர் சந்தித்திருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனம், 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளில் உள்ள தரவுகளைப் பெற்று, தவறாகப் பயன்படுத்தியதாகச் செய்தி வெளியிட்டவர் அவர். இந்தத் தரவுகள் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்தினார். பிரெக்ஸிட் தொடர்பான விவாதங்களையும் முன்னெடுத்தார். அதிக அளவில் ஆன்லைன் அவதூறுகளை அவர் எதிர்கொள்ள இவையெல்லாம் முக்கியக் காரணிகள். “சில நூறு ஆண்டுகளுக்கு என்னை உயிருடன் எரித்திருப்பார்கள்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

இப்படியான அச்சுறுத்தல்கள் சில சமயம், கொலைவரை சென்றுவிடுவதுண்டு. மெக்சிகோவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மரியா எலெனா ஃபெர்ரால், கோயுல்டா நகர முன்னாள் மேயரின் ஊழல்கள் குறித்து செய்தி வெளியிட்டுவந்தார். இதனால், முன்னாள் மேயரின் மகன் அவரைப் பற்றி ஆன்லைனில் அவதூறு செய்துவந்தார். இதுதொடர்பாகப் புகார் தெரிவித்த ஃபெர்ரால் படுகொலைசெய்யப்பட்டார். இந்தத் தகவலை இந்த ஆய்வு பதிவுசெய்திருக்கிறது.

ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் ஊடகவியலாளர்கள், ஆன்லைன் குற்றங்களைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஊடக நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT