போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்யும் போலீஸார்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்யும் போலீஸார் 
சர்வதேசம்

அமெரிக்காவில் பரபரப்பு... பல்கலைக்கழகங்களில் திடீரென வெடித்த போராட்டம்; ஏராளமானோர் கைது!

காமதேனு

பாலஸ்தீனத்தின் காசா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் திடீரென போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தகவல் படி காசாவில் 34,262 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 14,500 குழந்தைகளும், 8,400 பெண்களும் அடங்குவர். இது தவிர 77,229 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோல் இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 128 பேர் குழந்தைகள் ஆவர். 4,800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இருநாடுகளும் போரை நிறுத்த உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நேற்று திடீரென போராட்டம் வெடித்தது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போராட்டம் ஹார்வர்ட், யேல் மற்றும் ஐவி லீக் ஸ்கூல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்தது. அங்கு பாலஸ்தீனிய மாணவர் அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அங்கு நிலைமையை கட்டுப்படுத்த போலீஸார், தடியடி பிரயோகம் செய்தனர்.

அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

இதற்கிடையே இப்போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன சார்பு போராட்டம் கொடூரமானது என்றும், அப்பல்கலைக்கழகங்களை யூத எதிர்ப்பு கும்பல் கைப்பற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல், இப்போராட்டமானது, பயங்கரவாத அமைப்புகளின் குரல்களை எதிரொலிப்பதாக கூறி, வெள்ளை மாளிகையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT