சர்வதேசம்

இலங்கையில் சீனாவின் மின் திட்டங்களுக்கு மாற்றாக இந்தியாவின் திட்டங்கள்!

காமதேனு

இலங்கை மண்ணில் சீன முதலீடுகளுக்கு மாற்றாக இந்தியாவின் திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கியிருக்கின்றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தில் இதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.

2021 ஜனவரியில், இலங்கையின் யாழ்ப்பாணம் அருகில் உள்ள நயினா தீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய மூன்று இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் சீனாவின் சினோசார் - எடெச்வின் நிறுவனம் முதலீடு செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பாக் ஜலசந்தியில், தமிழகத்திலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் முதலீட்டில் எரிசக்தித் திட்டங்கள் அமைவது குறித்து இந்தியா உடனடியாக ஆட்சேபம் தெரிவித்தது. இதற்கு மாற்றாக, இதே திட்டங்களைத் தொடங்க பெரிய அளவில் கடனுதவி வழங்கவும் இந்தியா முன்வந்தது. இதனால், யார் பக்கம் நிற்பது எனும் குழப்பத்தில் இந்தத் திட்டங்களை இலங்கை அரசு ஒத்திப்போட்டது. இது சீனாவிடமிருந்து எதிர்ப்பையும் கிளப்பியது.

இந்தச் சூழலில், தற்போது இலங்கை சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று (மார்ச் 28) இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரான ஜி.எல்.பீரிஸைச் சந்தித்துப் பேசினார். அப்போது இந்த மூன்று திட்டங்களை இந்தியா முன்னெடுத்து நடத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இந்தியா தொடங்கவிருக்கும் மூன்றாவது மின்திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT