வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 
சர்வதேசம்

அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆப்கன் அரசு: அடுத்த முயற்சியில் இறங்கும் இந்தியா!

காமதேனு

ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசு அமைவது தொடர்பான பேச்சுவார்த்தையில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், 2021 ஆகஸ்ட் 15-ல், ஆப்கானிஸ்தான் ஆட்சிப் பொறுப்பை தாலிபான்கள் கைப்பற்றினர். அடிப்படைவாதிகளான தாலிபான்களின் ஆட்சி அமைந்ததால் அந்நாட்டு மக்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் நிதிப் பங்களிப்பில் பல்வேறு திட்டங்கள் ஆப்கனில் செயல்படுத்தப்பட்டுவந்த நிலையில் தாலிபான்களின் வருகையால் அவை நிறுத்தப்பட்டுவிட்டன. அரசு ஊழியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு அரசு அமைப்புகள் தள்ளப்பட்டன. இதுபோன்ற விஷயங்களில் தாலிபான் அரசு காட்டிய அலட்சியத்தால், மக்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கனில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை அமைக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இறங்கியிருக்கின்றன. தாலிபான்களின் ஆட்சி அமைவதற்கு முன்னரே இதற்கான பேச்சுவார்த்தையை அந்நாடுகள் தொடங்கின. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்துவருகின்றன. கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளும் கலந்துகொள்ளும் இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்றிருக்கிறது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஜே.பி.சிங் கலந்துகொள்கிறார். பாகிஸ்தான் - ஆப்கன் - ஈரான் ஆகிய நாடுகள் தொடர்பான வெளியுறவு விவகாரங்களைக் கவனித்துக்கொள்பவர் இவர்.

முன்னதாக, ‘இந்தியா இதில் பங்கேற்கும்’ என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவுடன் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்திருந்தார். “ஆப்கன் நிலவரம் என்ன என்பதை உலகம் மறந்துவிடக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

நேற்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாலிபான்கள் தரப்பிலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என தாலிபான் தரப்பிலிருந்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT