சர்வதேசம்

‘இறந்துவிட்டார் என்பதால் அவரை மன்னிக்க முடியாது’ - அபேவுக்கான அரசு இறுதிச் சடங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சந்தனார்

ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. அத்துடன், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67), ஜூலை 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் படுகொலை செய்த முன்னாள் கடற்படை வீரர் டெட்ஸுயா யமாகாமி, சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார். தென் கொரியப் பின்னணி கொண்ட தேவாலயம் ஒன்றுக்குத் தனது தாய் அதிக அளவில் நன்கொடை கொடுத்ததால், அவரது குடும்பம் திவாலானதாக விசாரணையில் டெட்ஸுயா யமாகாமி தெரிவித்திருந்தார். அந்த தேவாலயத்துடன் ஷின்ஸோ அபே தொடர்பில் இருந்ததால் அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் கூறியிருந்தார்.

ஜூலை 12-ம் தேதி ஷின்ஸோ அபேயின் இறுதிச்சடங்கை அவரது குடும்பம் தனிப்பட்ட முறையில் நடத்தியது. டோக்கியோவில் உள்ள ஸோஜோஜி பவுத்த ஆலயத்தில் நடந்த இந்த இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஜப்பானைப் பொறுத்தவரை அரச குடும்பத்தினருக்கு மட்டுமே அரசு முறை இறுதி அஞ்சலி செலுத்தப்படும். இந்தச் சூழலில் ஷின்ஸோ அபேவுக்கு அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியிருந்தார்.

எனினும், ஜப்பான் மக்களில் பெரும்பாலானோருக்கு இதில் சம்மதம் இல்லை. ஷின்ஸோ அபேவுக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து, சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் பிரதமர் இல்லம் முன்பு ஒருவர் தீக்குளித்த சம்பவமும் நடந்தது. இன்றுகூட டோக்கியோ பூங்காவில் சிலர் கையில் பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். , அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்திருந்தாலும் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று பலர் கூறியிருக்கிறார்கள்.

காரணம் என்ன?

ஷின்ஸோ அபே தனது ஆட்சிக்காலத்தின்போது, ராணுவத்தைப் பலப்படுத்த எடுத்த முயற்சிகள் சர்ச்சையாகின. அவ்ரது கொள்கைகள் போருக்கு ஆதரவானவை எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“ஷின்ஸோ அபே சாமானிய மக்களுக்குத் துணை நின்றவர் அல்ல. அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு சர்வாதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கும் யோஷிகோ கமாட்டா எனும் பெண், “அவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரை நாங்கள் மன்னிக்கப்போவதில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், ஷின்ஸோ அபேயின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட்ட தென் கொரிய தேவாலயத் தொடர்பும் அவர் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. அந்த தேவாலயம் பெருமளவில் நிதி திரட்டுவது, தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொள்வது எனப் பல்வேறு புகார்களுக்குள்ளானது. அந்த தேவாலயத்தின் மீது பல வழக்குகளும் உள்ளன.

மேலும், அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக 12 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 97 கோடி ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சேர்த்தால் செலவு இன்னும் அதிகரிக்கும் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வளவு செலவு செய்து அவருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்த வேண்டுமா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செய்சிசோ முராகாமி போன்றோர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இந்நிகழ்வை ரத்து செய்யக்கோரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் மனு செய்திருக்கின்றனர்.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஒபாமா, ஜப்பான் பட்டத்து இளவரசர் உட்பட 6,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

SCROLL FOR NEXT