சர்வதேசம்

வறுமை ஒழிப்பும் வாய்ப் பேச்சும்!

ஆர்.என்.சர்மா

எந்த நாட்டிலும் வறுமையைப் பற்றியும் வறியவர்கள் குறித்தும் ஆட்சியாளர்கள் மனம் திறந்து உண்மைகளைப் பேசுவதில்லை. அதற்குக் காரணம், ‘இவர்களுடைய வறுமையைப் போக்க என்ன செய்தீர்கள்?’ என்ற கேள்வி முதலில் வரும். அடுத்து, ‘உங்களுடைய எந்தக் கொள்கைகளால் வறுமை அதிகமானது என்று சொல்ல முடியுமா?’ என்றும் கேட்பார்கள். எனவே வறுமையைப் பற்றிக் குறிப்பிட்டே தீர வேண்டும் என்றாலும், தங்களுடைய நடவடிக்கைகளால் ஏராளமானோர் வறுமைக்கோட்டைவிட்டு வெளியே வந்துவிட்டதாகவோ, பசியின்றி நிம்மதியாக வாழ்வதாகவோ கூறிவிடுவார்கள். இதற்கும் முத்தாய்ப்பாக, ‘இன்னும் ஐந்து ஆண்டுகளில் வறியவர்கள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்’ என்றும் கூசாமல் சொல்லிவிடுவார்கள். பாகிஸ்தான் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுமா என்ன?

பாகிஸ்தான் அரசின் நிதித் துறை ஆலோசகர் சௌகத் தரின் இதைத்தான் செய்திருக்கிறார். “நாட்டில் வறியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே?” என்று நிருபர்கள் கேட்டபோது, உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, “ஓராண்டுக்கு முன்னால் பாகிஸ்தானில் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்ந்தவர்கள் 5.4 சதவீதம் இப்போது அது 4.2 சதவீதமாகக் குறைந்திருக்கிறது” என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

உண்மை என்னவென்றால், பாகிஸ்தான் மக்கள்தொகையில் 37 சதவீதம் பேர் - அதாவது 8 கோடிப் பேர் - இன்னமும் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர் என்று அதே அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டு மக்கள் தொகை மொத்தம் சுமார் 22 கோடி. வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப்பவர்கள் 8 கோடி என்றால் எஞ்சியவர்கள் பணக்காரர்கள் என்று பொருள் அல்ல. வறுமைக் கோட்டுக்கும் மேலே இருக்கும் வறியவர்கள், நடுத்தர வர்க்கத்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள் என்று ஏழைகள் எண்ணிக்கை மேலும் 8 கோடியாக இருந்தாலும் வியப்பதற்கு இல்லை. எந்த அரசும் தன்னுடைய செயலை அப்பட்டமாகத் தோலுரிக்கும் புள்ளிவிவரங்களைத் தருவதே இல்லை.

வறியவர்கள் பற்றிய கேள்விக்கு அளித்த இன்னொரு பதில்தான், வறியவர்கள் மீது ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கரிசனம் என்பதைக் காட்டுகிறது. “பாகிஸ்தானில் எல்லா நகரங்களிலும் உள்ள ஹோட்டல்கள், சாப்பிட வருகிறவர்களால் நிரம்பி வழிகிறது” என்றும் பேசியிருக்கிறார் தரின். ஹோட்டல்கள் மொத்தம் எத்தனை இருந்துவிடும், அதில் சாப்பிடுகிறவர்கள் எத்தனை ஆயிரம் பேர்களாக இருப்பார்கள்? பணக்காரர்கள், உயர் நடுத்தர வர்க்கத்தினர் தினந்தோறும்கூட ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம், அதனால் எல்லா மக்களும் பசியாறிவிடுவதாக நினைத்துவிட முடியுமா? ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே எனச் சொன்ன சீமாட்டியின் வாரிசுகளுக்கு எந்த நாடுகளிலும் குறைவே இருப்பதில்லை, இந்தியா உட்பட!

பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி வேகம், கடந்த பத்தாண்டுகளாக மிக மந்தமாகவே இருக்கிறது. அரசின் பேரியியல் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் இல்லை. தொழில் துறையிலும், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் முதலீடு குறைவாகவே இருக்கிறது. ஏற்றுமதி அளவும், ஏற்றுமதியாகும் பொருட்களின் பட்டியலும் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. புதிய ஏற்றுமதிகள் பெருகவில்லை. போதாக் குறைக்கு 2018 இறுதியிலும், பிறகு கோவிட் பெருந்தொற்றாலும் ஏராளமானோர் வேலைவாய்ப்பையும் வருவாயையும் இழந்தனர். கடந்த மூன்றாண்டுகளில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வாடுகின்றனர். விலைவாசி உயர்வைத் தாக்குப்பிடிக்க முடியாமல், கிடைக்கும் ஊதியம் போதாமல் தவிக்கின்றனர்.

பாகிஸ்தானின் மைய வங்கி கவர்னர், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பைக் குறைத்ததால் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் பலன் அடைந்திருப்பதாகவும் அது அரசின் சாதனை என்பதைப் போலவும் பேசியிருக்கிறார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியருக்கு வருமானம் அதிகரிப்பதால் பாகிஸ்தானிகளுக்கோ அரசுக்கோ பலன் ஏதும் இல்லை. மேலும் அவர்களுடைய எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவு. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே வசதியாகக் கூட இருந்திருப்பார்கள். வறுமை ஒழிப்புக்கும் இதற்கும் எந்த வகையில் தொடர்பு இருக்க முடியும்?

வறுமையை எப்படி ஒழிப்பது என்பதில் அரசுக்கு தெளிவில்லை என்பதையே வறுமை பற்றிய இவர்களுடைய கண்ணோட்டம் தெரிவிக்கிறது என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் தனது தலையங்கத்திலும் வருத்தம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT