சர்வதேசம்

இன்று இரவு 8 மணிக்குப் புவி நேரம்: எதிர்காலத்தைச் செதுக்கும் தருணம்!

காமதேனு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை புவி நேரம் (Earth Hour) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணி அளவில் புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகமெங்கும் உள்ள மக்கள், அத்தியாவசியத் தேவை அல்லாத பிற மின்விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்துவைப்பதன் மூலம், மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எரிசக்தியைப் பாதுகாப்பது எனத் தங்கள் பங்குக்கு, இந்த பூமிக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யவிருக்கின்றனர். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக, உலக மக்கள் கைகோக்கும் தருணமாக இது பார்க்கப்படுகிறது.

2007-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக வனவிலங்கு நிதியத்தின் முன்னெடுப்பில், இந்த வழக்கம் தொடங்கியது. 2008-ல் 35 நாடுகள் இதைக் கடைப்பிடித்தன. தற்போது, 190 நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எனப் புவி நேரத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுகிறது என்பதால், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இன்று ஏற்கெனவே புவி நேரத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2009-ம் ஆண்டு முதல் இது பின்பற்றப்படுகிறது. 58 நகரங்களில் தொடங்கிய இந்த வழக்கம், அடுத்தடுத்த ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், தனிநபர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எனப் பலராலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

‘நமது எதிர்காலத்தைச் செதுக்குவோம்’ என்பதுதான், இந்த ஆண்டின் - அதாவது இன்றைய புவி நேரத்தின் முழக்கம். சம்பிரதாயமாக அல்லாமல் உணர்வுபூர்வமாக இதை முன்னெடுப்போம். நமது எதிர்காலத்தையும் நமது சந்ததியினரின் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்!

SCROLL FOR NEXT