சர்வதேசம்

கோத்தபயவுக்கு எதிராக மீண்டும் வெடித்த போராட்டம்: இலங்கையில் காலவரையற்ற ஊரடங்கு!

வீரமணி சுந்தரசோழன்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் இன்று மிக பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில் நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் நேற்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இலங்கை காவல்துறை தலைவர் சந்தன விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி சனிக்கிழமையன்று பிரமாண்ட பேரணி நடத்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றே கொழும்புவில் குவிய தொடங்கியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபயவுக்கு எதிராக மீண்டும் வெடித்த போராட்டம்:

கோத்தபய ராஜபக்சவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் நாட்டினை படுபாதாளத்தில் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டி அவரை ராஜினாமா செய்யக் கோரி பல மாதங்களாக கோத்தபயவின் கொழும்பு அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். சனிக்கிழமை மிகப்பிரமாண்ட பேரணிக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த சூழலில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்திற்கு தடைவிதிக்க இலங்கை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் கோத்தபய ராஜபக்சவின் கொழும்பு அலுவலகத்தின் முன்பு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மேலும், சனிக்கிழமை திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளையும், போராட்டக்காரர்களையும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது. எனவே போராட்டத்தை தடுக்க முடியாத நிலையில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மே மாதம் கொழும்பு அதிபர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்களை மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது, ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இலங்கை தற்போது தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில் உள்ளது. இதனால் எந்த நாட்டில் இருந்தும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலாமல் அந்த நாடு தவித்து வருகிறது.

SCROLL FOR NEXT