நிலநடுக்கத்தில் சாய்ந்து நிற்கும் கட்டிடம் 
சர்வதேசம்

ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

காமதேனு

தைவான்  நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் தலைநகர் தைபேவில் இந்திய நேரப்படி இன்று காலை  5.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 என்பதாக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தைவான் மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. 

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால்  அங்குள்ள ஹுவாலியன்  நகரில்  கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. ரயில்கள், பேருந்துகளில் சென்றவர்களாலும் இந்த நிலநடுக்கத்தை நன்றாக உணரமுடிந்ததாக கூறும் நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து அதிக அளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்ட 15 நிமிடத்திற்கு பின் ஜப்பான் யோனகுனி கடலோரத்தில் அலைகள் உயரமாக எழும்பின. அங்கு சுனாமி அலைகள் கடற்கரையைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல அருகில் உள்ள மற்றொரு நகரின் கடலோரத்திலும் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதையடுத்து ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் மூன்று மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓகினவா மாகாணத்தில் கடலோர பகுதியிலிருந்து மக்கள் வெளியேறவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

SCROLL FOR NEXT