ஹாட் லீக்ஸ்

சபரீசன் யாகம்... சர்ச்சையாக்கும் பாஜக!

காமதேனு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்காக அங்கே சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இவ்விஷயத்தை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், முதல்வரின் மருமகனுக்காக பக்தர்களை மூன்று மணிநேரம் காக்கவைத்ததாக பாஜக அதிரடி குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முதல்வரின் மருமகன் சபரீசன் தனது நண்பரும் தொழிலதிபருமான வெங்கட்டுடன் நேற்று வந்தார். இவர்களுக்காக வள்ளிகுகை அருகே பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததாகச் சொல்லப்படும் இந்த மண்ணில் பொதுவாக எதிரிகளை வீழ்த்தவும், எதிர்ப்புகள் நீங்கவும் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்படுவது வழக்கம்.

முதல்வரின் மருமகனுக்காக வள்ளிகுகை முன்பு யாகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் வள்ளி குகைக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காலை 6 மணியில் இருந்தே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 8.15 மணிக்கு தொடங்கிய யாகம் 9 மணிக்கு முடிந்தது. அதன் பின்னரே வள்ளிகுகைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர் கோயிலில் விஐபி தரிசன டிக்கெட் வழங்கும் முறை அண்மையில் தான் ரத்துசெய்யப்பட்டது. வள்ளிகுகை தரிசனத்துக்காக வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாய் கட்டணமும் இப்போது இல்லை. இந்த நிலையில், விஐபி தரிசனம் எனச் சொல்லி மூன்று மணிநேரம் மற்ற பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்காத சம்பவம் அரங்கேறி இருப்பதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஓம் பிரபு திருச்செந்தூர் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT