அந்த நாள்

கவிதையாய் வந்த ‘கேளடி கண்மணி’க்கு 32 வயது: ஒரு மீள்பார்வை!

வி.ராம்ஜி

ஓர் இயக்குநரின் முதல் படம் என்பது விசிட்டிங் கார்டு மாதிரி. அவர் எப்படிப்பட்ட இயக்குநர், என்ன மாதிரியான படங்களைத் தருபவர் என்பதையெல்லாம் காட்டக்கூடிய அடையாளங்களாக முதல் படம் இருக்கும். ‘எதற்கு ரிஸ்க்’ என்று கமர்ஷியல் வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிற இயக்குநர்களும் இருக்கிறார்கள். ‘இதுதான் கதை... இவர்கள்தான் நடிப்பவர்கள்... இப்படித்தான் எடுக்க வேண்டும்’ எனும் முனைப்புடன், உறுதியுடன், நம்பிக்கையுடன் முதல் படத்தை இயக்குவது என்பது சாமானியமானதல்ல. அப்படியொரு படைப்புதான் இயக்குநர் வஸந்த் உருவாக்கிய முதல் படமான ‘கேளடி கண்மணி’.

தமிழ்த் திரையுலகில் நடிக, நடிகையரைக் கொண்டு பட்டியலிட்டால், அதிக அளவில் அறிமுகப்படுத்திய இயக்குநராக கே.பாலசந்தரைத்தான் குறிப்பிட முடியும். ‘இயக்குநர் சிகரம்’ என கொண்டாடப்படும் அவருடைய பட்டறையிலிருந்து வந்தவர் இயக்குநர் வஸந்த்.

1990-ம் ஆண்டு வெளியானது ‘கேளடி கண்மணி’. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எவரையும் வஸந்த் நாயகனாகத் தேர்வு செய்யவில்லை. ஆனால் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான, பிடித்தமான பாடகரான எஸ்பிபி-யை நாயகனாக்கி அழகு பார்த்தார். பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து உருவான ராதிகாவை, நாயகியாக்கினார்.

’90-களின் எல்லா நாயகர்களுக்கும் எஸ்பிபி-யின் குரல் ஒத்துப்போகும். எனவே பாடகராக அவர் அப்போது செம பிஸி. போதாக்குறைக்கு, மற்ற மொழிகளிலும் பறந்துபறந்து சென்று பாடிக்கொண்டிருந்தார். வஸந்த் என்ன மாயம் செய்தாரோ... மந்திரம் செய்தாரோ... கதையின் நாயகனாக அவரை நடிக்க சம்மதிக்க வைத்தார்.

ரமேஷ் அரவிந்த் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம்; படங்களையும் இயக்கியிருக்கலாம். ஆனால், ‘கேளடி கண்மணி’ தான் அவருக்கு ஸ்பெஷல். அவருக்கு சாக்லெட் பாய் எனும் அழகையும் அந்தஸ்தையும் கொடுத்த படம் அது. குழந்தை நட்சத்திரமான பேபி அஞ்சுவை, கதாநாயகி அஞ்சுவாக நடிக்கவைத்து புகழைப் பெற்றுத்தந்தார் வஸந்த்.

பூர்ணம் விஸ்வநாதனுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது. காது கேளாத, பேசமுடியாத கேரக்டரில் இருவருமே தங்களின் நடிப்பால் நம்முடன் பேசியிருப்பார்கள். அசத்தியிருப்பார்கள்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாகச் செய்து அசத்துகிற ஜனகராஜ், இந்தப் படத்திலும் அப்படியொரு அற்புதமான கேரக்டரில் ஜமாய்த்திருப்பார். எஸ்பிபி-யின் முதல் மனைவியாக வரும் கீதா, நம் நெஞ்சில் தனியிடம் பிடித்திருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உருவாக்கியதுதான் வஸந்த், பாலசந்தரின் சிஷ்யர் என்பதை நமக்கெல்லாம் உணர்த்தியது.

எஸ்பிபி-யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதே தனிக்கவிதை. அவரின் உடலும் குரலும் இன்னும் ஒத்துழைத்திருக்கும். அவரின் முகபாவனைகள் ஒருபக்கம் நடிக்க, அவரின் குரலும் கதைக்கு ஜீவனைக் கொடுத்து, நம் மனசைக் கடைந்தெடுத்தன; கரைத்தன.

‘முகமது பின் துக்ளக்’ படத்தைத் தயாரித்தவர். பார்த்திபனுக்கு ‘புதிய பாதை’ போட்டுக்கொடுத்தவர்... தயாரிப்பாளர் விவேக் சித்ரா சுந்தரம். பாலசந்தரின் பல படங்களை விநியோகஸ்தராக இருந்து வெளியிட்டவர். ’புதுப்புது அர்த்தங்கள்’ படப்பிடிப்பின்போது, ‘உங்கிட்ட கதை இருக்கா? இருந்தா நாளைக்கே கொண்டு வா. இல்லேன்னா, சீக்கிரமே ரெடி பண்ணிட்டு வா’ என்று வஸந்திடம் சொல்ல... அப்படி உருவானதுதான் ‘கேளடி கண்மணி’.

‘’ஆனால், என் முதல் படமாக ‘ரிதம்’ தான் வந்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்தக் கதையைவிட ‘கேளடி கண்மணி’ கதை, சுந்தரம் சாருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. எந்தக் குறுக்கீடுகளுமில்லாமல், சுதந்திரமாக பண்ண எல்லா வழிவகைகளும் செய்துகொடுத்தார்’’ என்று நெகிழ்வுடன் சொல்கிறார் இயக்குநர் வஸந்த் (என்கிற) வஸந்த் எஸ்.சாய்.

ரகுநாத ரெட்டியின் ஒளிப்பதிவு கவிதை. படத்தின் மற்றொரு நாயகன் இளையராஜா. ‘இந்தப் படத்துக்கு இளையராஜா சார்தான் வேணும்’ என்பதில் உறுதியாக இருந்த வஸந்த், அவரிடம் சென்று கதையைச் சொன்னார். கேட்டுவிட்டு இளையராஜா சொன்ன பதில்...’உடனே ஆரம்பி, பண்ணிடலாம்’!

‘கேளடி கண்மணி’ படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா.’தென்றல்தான் திங்கள்தான்’, ’நீ பாதி நான் பாதி கண்ணே’, ’கற்பூர பொம்மையொன்று’, ‘மண்ணில் இந்தக் காதலன்றி’, ‘என்ன பாடுவது’... என்று ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம்.அது மட்டுமல்ல, படம் நெடுக காட்சிகளுக்குள், தன் இசையால் ஊடுருவி, காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் இன்னும் இன்னுமாக கனம் சேர்த்திருப்பார் இளையராஜா. ‘கற்பூர பொம்மை ஒன்று’ எப்போது கேட்டாலும் எவர் கேட்டாலும் அழுதுவிடுவார்கள். இளையராஜாவின் இசையில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களின் பட்டியலில், ‘கேளடி கண்மணி’க்கும் இடமுண்டு.

சலனமே இல்லாமல் ஓடுகிற நதி மாதிரி, திரைக்கதையை அமைத்திருப்பார் வஸந்த். மகளுக்குச் சுமையாக இருக்கிறோமே... என்று வருந்தி, பூர்ணம் விஸ்வநாதனும் ஸ்ரீவித்யாவும் மரணத்தைத் தழுவ, அப்போது ராதிகாவின் அழுகை, முகபாவம், ஆக்டிங்... ‘நடிப்பு ராட்சஷி’ என நிரூபித்திருப்பார் ராதிகா.

பாலசந்தர் படங்களில் காட்சிக்குக் காட்சி ஒரு ‘டச்’ இருக்கும். அதேபோல், சிஷ்யரான வஸந்தின் ‘கேளடி கண்மணி’யிலும் ஆங்காங்கே ‘டச்’ வைத்துக்கொண்டே வந்திருப்பார்.

1990 ஜூலை 27-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர் விருதெல்லாம் கிடைத்தன. சிறந்த நடிகை என்று பிலிம்பேர் விருது ராதிகாவுக்குக் கிடைத்தது.

சமீபத்தில் இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்குக் கூட தேசிய விருதுகள் கிடைத்தன.

முதல் படம் ‘கேளடி கண்மணி’ வெளியாகி 32 ஆண்டுகளாகிவிட்டன. ‘நான் இப்படியான படம் எடுப்பவன், இப்படிப்பட்ட படங்களைக் கொடுப்பவன்’ என்பதிலிருந்து வழுவாமல் அப்படியே இருக்கிறார் வஸந்த். இன்று வரை ‘கேளடி கண்மணி’யின் பாடல்கள் காற்றில் எங்கோ கைகோத்து உலவிக்கொண்டேதான் இருக்கின்றன.

SCROLL FOR NEXT