அறிவொளி

30% குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பவில்லை: அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

காமதேனு

பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் மிக முக்கியமானவை பள்ளி மாணவர்களின் கல்வி விஷயத்தில் நிகழ்ந்தவை. பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் இவ்விஷயத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒடிசா மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாணவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளிகளுக்குத் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி வருகைப் பதிவேடுகளின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளிக்கும் தகவல்களை ஆராய்ந்தபோது, 70 சதவீத மாணவர்கள்தான் வகுப்பறைக்குத் திரும்பியிருக்கின்றனர் எனத் தெரியவந்ததாக ஒடிசா பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.பி.சேத்தி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

மல்கநகரி, பவுத், கஜபதி, சம்பல்பூர், நுவாபடா ஆகிய மாவட்டங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் வருகை, மாநில சராசரியைவிட குறைவு எனக் கூறியிருக்கும் அவர், 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் வருகை மல்கநகரி, பவுத், சம்பல்பூர், நுவாபடா ஆகிய மாவட்டங்களில் குறைவு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களின் நிலை குறித்து விரிவாகப் பேசியிருக்கும் அவர், குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பாதது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். குழந்தைகள் முற்றிலுமாக இடைநின்றிருக்கலாம், படிப்பில் ஆர்வம் குறைந்திருக்கலாம், குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் எனப் பல்வேறு காரணங்களையும் அவர் முன்வைத்திருக்கிறார். பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது, இணையவழிக் கல்வி என சூழல் முற்றிலும் மாறியதால் கற்றல் / கற்றலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கூடவே, குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்கு அழைத்துவரும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், இடைநின்ற குழந்தைகள் குறித்த பட்டியலைச் சேகரித்து ஆய்வு நடத்துமாறும் ஆட்சியர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதற்காக, குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று பெற்றோருடன் பேசி அவர்களை மீண்டும் வகுப்பறைக்கு அழைத்துவரும் பணிகளில் இளம் ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், உள்ளாட்சி உறுப்பினர்கள், சுய உதவிக் குழுக்களின் உதவியையும் நாடப்போவதாகக் கூறியிருக்கிறார். இலவசப் புத்தகங்கள், இலவசப் பாடப் புத்தகங்கள், இலவச மதிய உணவு, கல்வி உதவித் தொகை போன்ற பலன்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எனப் பெற்றோருக்கு எடுத்துக்கூறுமாறும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT