நாச்சியார் கோயில் – கல் கருடன்
நாச்சியார் கோயில் – கல் கருடன்  
ஆன்மிகம்

நாச்சியார் கோயில் – கல் கருடன்

கே.சுந்தரராமன்

நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லித் தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. தெய்வத் திருமணத்துக்கு பெரிதும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு, அவருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ தினங்களில் இத்தலத்தில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கல் கருட வாகனம், இத்தலம் தவிர வேறு எங்கும் காணக் கிடைக்காது.

சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாக குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர்.

இத்தலத்தில் தாயாருக்கே முதல் மரியாதை என்பதால், அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி தாயார் முன்னர் செல்வார். கருட வாகனம் அன்னப்பறவையின் பின்னர் செல்ல வேண்டியுள்ளதால், அதன் எடை கூடிக்கொண்டே போகும். அன்னப்பறவையின் மெது நடைக்கு ஈடுகொடுத்து, கருடன் வழக்கம்போல் வேகமாக பறந்து செல்லாமல் மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது.

கல் கருடனின் 9 நாகங்கள் ஆபரணங்களாக அலங்கரிக்கின்றன. கல் கருடனின் சிறப்பு காரணமாக, இங்கு நடைபெறும் கருட சேவை சிறப்பானதாக அறியப்படுகிறது. பெரியாழ்வாரின் சொரூபமாக கருடாழ்வார் போற்றப்படுகிறார். அதனால் கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழை இலையில் கலந்து அவரது திருமேனி மீது சாற்றினால், பக்தர்கள் அனைத்து வித நற்பலன்களைப் பெறுவார்கள்.

ஆடி மாத ஸ்வாதி நட்சத்திரத்தில் கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி (சுக்ல பட்ச பஞ்சமி) தினத்தில் வணங்குவதால் புத்திரப் பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். வியாழன், சனிக்கிழமை இவருக்கு உகந்த நாட்கள். அனைத்துவித விஷ ஜந்துக்களிடம் இருந்து கருடாழ்வார் காத்தருள்வார்.

ஓம் நமோ நாராயணாய

SCROLL FOR NEXT