திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கூட்டம் (கோப்புப் படம்) 
ஆன்மிகம்

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

காமதேனு

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா இன்று காலை தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18ம் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று காலை முதல் தொடங்கியது. இதனால் கோயில் திருநடை இன்று அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று நண்பகல் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

கந்த சஸ்டி விழாவின் சிகர நிகழ்வான சுவாமி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 18ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. வழக்கமாகவே சூரசம்ஹாரத்திற்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும் நிகழாண்டில் சூரசம்ஹாரம் சனிக்கிழமை வருகிறது. அதனால் கூடுதல் பக்தர்கள் வருவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தொடர்ந்து 19ம் தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது. அதோடு கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கந்தசஷ்டியை முன்னிட்டு விரமிருக்கும் பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கியிருக்க வசதியாக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்ரையை சுத்தப்படுத்தி, பொக்லைன் மூலம் சமன் செய்யும் பணியும் நடத்தப்பட்டு வருகிறது. 

SCROLL FOR NEXT