திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் 
ஆன்மிகம்

திருப்பதி திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோத்ஸவம்

மு.இசக்கியப்பன்

திருப்பதி பத்மாவதி தாயார் அருளும் கோயில் அமைந்த இடம் திருச்சானூர். திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். திருச்சானூரில் அலர்மேல்மங்கைத் தாயார் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால் இத்தலம், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புக்குரியவர் அலர்மேல்மங்கை தாயார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்

பத்மசரோவரம் எனப்படும் மிகப்பெரிய தெப்பக்குளம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஆகாசராஜன் வேள்விக்கான இடத்தை சமன்செய்தபோது, மண்ணுக்குள் இருந்து பெட்டி ஒன்று கிடைத்தது. அதனுள் தாமரை மலரில் இருந்த பெண் குழந்தையை, ஆகாசராஜன் எடுத்து வளர்த்தார். அவள்தான் மகாலட்சுமியின் அம்சமான பத்மாவதி தாயார். குறிப்பிட்ட அந்த இடம்தான் இந்த தெப்பக்குளம். தாயார் கண்டெடுக்கப்பட்ட நாளான கார்த்திகை பஞ்சமி அன்று, பல லட்சம் பேர் திரளும் தீர்த்தவாரி உற்சவம் இந்த தெப்பக்குளத்தில்தான் நடைபெறுகிறது.

திருமலையில் வீற்றிருக்கும் திருவேங்கடவன் தினமும் இரவில் திருச்சானூருக்கு வந்துவிட்டு, அதிகாலையில் மீண்டும் திருமலைக்குச் சென்று விடுவதாக ஐதீகம்.

திருச்சானூர் (ஸ்ரீநிவாசமங்காபுரம்) பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோத்ஸவம்

மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சானூர், அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை (நவம்பர்) மாதத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரம்மோத்ஸவ விழாவுக்காக கோலாகலமாகத் தயாராகிவருகிறது பத்மாவதி தாயார் கோயில்.

இந்தப் பிரம்மோத்ஸவ நாட்களில் தாயார், சேஷவாகனம், அன்ன வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், கஜ வாகனம் என தினசரியும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஸ்ரீநிவாச பெருமாளுக்கு கருட வாகன சேவை எப்படி மிக விஷேசமானதோ அதேபோல பத்மாவதி தாயாருக்கு கஜ வாகன சேவை மிகவும் சிறப்பானது.

பத்மசரோவரம் குளத்தில் கார்த்திகை பஞ்சமி தீர்த்த நீராடல்

இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோத்ஸவம் வரும் நவம்பர் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ம் தேதி பகலில் பெரிய சேஷ வாகனம், இரவில் ஹம்ஸ வாகனத்தில் தாயார் பவனி வருகிறார். 12-ம் தேதி முத்துப்பந்தல் மற்றும் சிம்ம வாகனம், 13-ம் தேதி கல்பவிருட்சம் மற்றும் ஹனுமந் வாகனம், 14-ம் தேதி காலை பல்லக்கு, மாலை வசந்தோத்ஸவம், இரவில் யானை வாகனம், 15-ம் தேதி சர்வபூபாள வாகனம், தங்கத்தேர், இரவில் கருட வாகனம், 16-ம் தேதி சூரியபிரபை மற்றும் சந்திரப்பிரபையில் வீதியுலா நடைபெறுகிறது. 17-ம் தேதி திருத்தேரோட்டம், 18-ம் தேதி சக்கர ஸ்நானம், பஞ்சமி தீர்த்தம் ஆகியவை முக்கிய நிகழ்வுகள்.

பிரம்மோத்ஸவம் நிறைவு நாளில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த நிகழ்வில் பத்மசரோவரம் குளத்தில் புனித நீராடி, தாயாரை தரிசிக்க, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் கூடுவார்கள்.

SCROLL FOR NEXT