அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரின் குதிரை.
அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரின் குதிரை. 
ஆன்மிகம்

மதுரை வந்தது கள்ளழகரின் குதிரை

கே.எஸ்.கிருத்திக்

'யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே...' என்பார்களே, அதைப் போல வைகையில் அழகர் எழுந்தருள்வதற்கான வாகனமான தங்கக்குதிரை அழகர்கோயிலில் இருந்து இன்று மதுரை வந்து சேர்ந்துள்ளது.

திருவிழாக்களின் நகரான மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த விழாவினூடேயே, அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தற்போது தொடங்கியிருக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குள்ள கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருள்கிறார்.

14-ம்தேதி (வியாழக்கிழமை) அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் கோலம் பூண்டு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்படும் அழகர், மறுநாள் இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கக் குதிரையில் எழுந்தருள்வார்.

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தடைந்த அழகரின் குதிரை.

மதுரை வந்த தங்கக்குதிரை

இதனையொட்டி இன்று காலையிலேயே கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து, தங்கக்குதிரை வாகனம் மதுரை புறப்பட்டது. அங்கிருந்து டிராக்டரில் கொண்டுவரப்பட்டதால் பகல் 11.30 மணியளவில் தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் வந்ததடைந்தது. கோயில் வாசலில் டிராக்டரில் இருந்து தங்கக்குதிரை இறக்கப்பட்டபோது, பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷமிட்டும், கை தட்டியும் வரவேற்றனர். பெண்கள் குலவையிட்டு குதிரையை வரவேற்றார்கள்.

சித்திரை முழுநிலவு நாளான வருகிற 16-ம் தேதி இந்தக் குதிரையில்தான் அழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT