ஆன்மிகம்

சிவனருள் பெற்ற அடியார்கள் – 8

கே.சுந்தரராமன்

சேலம் மாவட்டம் இருக்குவேளூரில் அவதரித்த கணம்புல்ல நாயனார் செங்குத்தர் மரபைச் சார்ந்தவர். நிறைந்த செல்வம் பெற்று, நற்குண சீலராய் விளங்கியவர். சிறந்த சிவனடியாராக இருந்து, ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என்று விரும்பி அன்பு செய்தவர். ஆலயத் தொண்டுபுரிந்து இறைவனின் அருளைப் பெற்றவர்.

கணம்புல்ல நாயனார்

வாழப்பாடியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இருக்குவேளூர் (பேளூர்) என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் கணம்புல்ல நாயனார். வட வெள்ளாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த இவ்வூரில் நிறைய சோலைகள் உண்டு. இச்சோலையில் உள்ள பலாப்பழங்கள் வெடித்து, அதில் இருந்து வழியும் தேன் பாய்ந்து, வயல்கள் விளைந்ததாக புலவர் பெருமக்கள் இவ்வூரின் இயற்கை வளத்தை வர்ணிப்பதுண்டு.

வேளூர் தலைவராக விளங்கிய கணம்புல்ல நாயனார் நிறைந்த செல்வம் பெற்று, சிவநெறியைப் பின்பற்றி அடியார் பெருமக்களைப் போற்றி வந்தார். திருத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று அங்கு திருப்பணிகள் மேற்கொண்டு வந்தார். ‘செல்வத்தின் பயன் சிவன் கோயிலின் உள்ளே ஒளியுற விளக்கெரித்தலே’ என்ற கொள்கை உடைய கணம்புல்லர், சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயில்களில் எண்ணற்ற நெய்விளக்குகள் ஏற்றி நாள்தோறும் இறைவனை வழிபட்டு வந்தார்.

கணம்புல்ல நாயனார்

கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த மானுடப் பிறவி என்ற அஞ்ஞான இருள் நீங்கி, அருளுடைய ஞானவீட்டை அடைய வழி கிடைக்கும் என்பதை தனது உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லி வந்தார். இவ்வாறு ஆலயப் பணி, அடியார் பணி செய்துவந்த கணம்புல்லரின் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அச்சமயத்திலும் தவறாமல் கோயில்களுக்குச் சென்று திருவிளக்குகள் ஏற்றும் பணியை மறக்காமல் செய்துவந்தார்.

நன்கு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஊரில், வறியவராக வசிக்க, கணம்புல்லருக்கு விருப்பம் இல்லை. தன்னிடம் இருக்கும் நிலபுலங்களை விற்று, ஓரளவு கையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருக்குவேளூரை விட்டுக் கிளம்பினார். ஊர் ஊராகச் சென்று கோயில்களில் திருவிளக்கு ஏற்றியபடி பயணித்தார். நிறைவாக தில்லை தலத்தை வந்தடைந்தார்.

தில்லை அம்பலத்தானை தரிசித்து மகிழ்ந்தார். சிதம்பரத்தை விட்டு வேறு ஊர் செல்ல மனமில்லாமல் அங்கேயே தனியாக வீடு எடுத்து தங்கினார். தினமும் தில்லை அம்பலத்தான் சந்நிதியில் எண்ணற்ற விளக்குகள் ஏற்றி இறை தரிசனம் கண்டார்.

தில்லையில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்ற சிவன்கோயிலில் விளக்குகள் ஏற்றும் பணியை மேற்கொண்ட அடியார், வறுமையால் மனம் வாடினார். நாளுக்கு நாள் கையிருப்புப் பணமும் கரைந்தது. விற்பதற்குக் கூட இல்லத்தில் ஏதும் பொருள் இல்லாத நிலை ஏற்பட்டது. ஊராரிடம் கேட்பதற்கு அஞ்சிய அடியார், உடல் உழைப்பால் செல்வம் சேர்க்க எண்ணினார்.

கணம்புல்ல நாயனார்

பொருளீட்டும் முடிவுடன், அருகே உள்ள இடத்தில் இருக்கும் கணம்புல்லை அரிந்து வந்து, அவற்றை விற்று, பணமாக்கி, நெய் வாங்கி, கோயிலில் விளக்கேற்றும் பணியைத் தொடர்ந்தார். நாட்கள் செல்லச் செல்ல, கணம்புல்லையும் யாரும் வாங்க முன்வரவில்லை. அவை அனைத்தும் விற்பனையாகாமல் இருந்தன.

செய்வதறியாமல் தவித்த அடியார், கணம்புல்லையே திரியாக திரித்து அழகிய விளக்காக எரித்தார். கோயில்களில் பெரும்பாலும் இரவு வரை விளக்குகள் எரிவது வழக்கம். கணம்புல் விரைவாகவே அணைந்துவிட்டது. அடியார் சற்றும் யோசிக்காமல் தன்னுடைய திருமுடியையே விளக்காக ஏற்றத் துணிந்தார். ’ஓம் நமசிவாய’ என்று ஐந்தெழுத்து ஓதியபடி தன் திருமுடியை விளக்காக எரிக்கத் தொடங்கினார்.

திருப்புலீச்சரத்து பெருமான் தனது அடியாரை அதற்கு மேல் சோதிக்க விருப்பமில்லாமல், ரிஷப வாகனத்தில் சக்தியுடன் எழுந்தருளி, அவரது செயலை தடுத்து நிறுத்தி, அருள்பாலித்தார். அடியாரும் தரையில் விழுந்து இறைவனை வணங்கினார். கணம்புல்ல நாயனார் சிவபெருமானின் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

‘கணம்புல்ல நம்பிக்கு அடியேன்’

**

ஆலயத்தொண்டு புரிந்தவர்கள் - 5.முருக நாயனார்

திருப்புகலூரில் அவதரித்த அந்தணரான முருக நாயனார், எந்நேரமும் ஈசனை நினைக்கும் திருவுள்ளம் கொண்டவர். பல வித மலர்களை சேகரித்து, மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு அணிவிக்கும் பணியை தினமும் மேற்கொண்டவர்.

முருக நாயனார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் தலத்தில் உறையும் அக்னிபுரீஸ்வரரையும், கருந்தார் குழலி அம்பாளையும் தரிசித்து மகிழும் சிவனடியாராக முருக நாயனார் விளங்கினார். இத்தலத்துக்குள் இருக்கும் வர்த்தமானேஸ்வரர் திருத்தலத்தையும் தரிசிப்பார். எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர்தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார். தேவார திருப்பதிகத்தையும் கோயில்களில் ஓதுவார்.

தினமும் இறைவனுக்கு மந்தாரம், கொன்றை முதலிய கோட்டுப் பூக்கள், அல்லி, நந்தியவர்த்தம், முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்கள், தாமரை, நீலோத்பலம் போன்ற நீர்மலர்களைப் பறித்து, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று விதவிதமான மாலைகளாகத் தொடுக்கும் கைங்கர்யத்தை தவறாமல் செய்து வந்தார்.

முருக நாயனார்

இறைவனுக்கு பூமாலை அணிவித்து, பாமாலை பாடி அர்ச்சித்து மகிழ்ந்த முருக நாயனார் சிவனடியார்களுக்காக சிறந்த மடம் ஒன்றை கட்டினார். இந்த மடத்துக்கு திருஞான சம்பந்தர், அப்பர் பெருமான், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ அடியார்கள் எழுந்தருளியுள்ளனர்.

அக்னிபுரீஸ்வரர் கோயில்

திருநெல்லூரில் நடைபெற்ற திருஞானசம்பந்தரின் பெருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற முருக நாயனார், இறைவன் அருளிய பெரொளியில் திருஞான சம்பந்தர் புகுந்தபோது அவருடன் சேர்ந்து கொண்டார். நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

‘முருகனுக்கு அடியேன்’

முத்தைய அத்தியாயத்தை வாசிக்க...

SCROLL FOR NEXT