கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா 
க்ரைம்

மதுரை சித்திரை திருவிழாவில் பயங்கரம்... பட்டாக்கத்தியுடன் ஓட ஓட விரட்டிய கும்பல்: வாலிபர் கொலை!

காமதேனு

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் பட்டாக் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரரை வணங்கினர். இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், பக்தர்கள் அலைகடலென திரண்டு வந்து வழிபட்டனர். கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்ட பக்தர்கள் அழகரை மனமுருக வழிபட்டனர்.

இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவைக் காண வந்த இளைஞர்கள், வைகை ஆற்றுக்குள் இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்கியது. இதில் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனை ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT