காவல் துறை பேருந்தை திருட முயன்ற சோனு பகீரத் 
க்ரைம்

குறட்டை விட்ட போலீஸ்காரர்... சாவியைத் திருடி காவல் துறை பேருந்தை ஓட்டிச் செல்ல முயன்ற இளைஞர்!

காமதேனு

காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்து போலீஸ்காரரின் சட்டையில் இருந்து சாவியை எடுத்து காவல் துறை வாகனத்தை இளைஞர் திருடிச் செல்ல முயன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் உள்ள காவல் துறை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பேருந்து நின்றுள்ளது. அப்போது அந்த பேருந்திற்குள் சட்டையைக் கழட்டி வைத்து விட்டு போலீஸ்காரர் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்.

கலபுர்கி

அப்போது திடீரென காவல் துறை வாகனம் கிளம்புவது போலத் தெரிந்தது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரருக்கு எழுந்து பார்த்த போது, பேருந்து இருக்கையில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர், உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்தார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது.

அவரிடம் விசாரணை நடத்திய போது, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனு பகீரத்(25) என்பது தெரிய வந்தது. அவர் கலபுர்கியில சென்ட்ரிங் ஏஜென்டாக பணியாற்றி வந்துள்ளார். குடிபோதையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குள் வந்தவர், அங்கிருந்த பேருந்துக்குள் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்துக்குள் சட்டையைக் கழட்டிப்போட்டு விட்டு போலீஸ்காரர் ஒருவர், உறங்கிக் கொண்டிருப்பதை சோனு பார்த்துள்ளார். போலீஸ்காரர் சட்டையில் இருந்த சாவியை எடுத்து பேருந்தை திருடிச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. அவரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த திங்களன்று நடந்த சம்பவம், தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகா காவல் துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT