க்ரைம்

13 வயது சிறுமி பலாத்கார கொலை: மாநில முதல்வரே களத்தில் இறங்கிய வழக்கு

எஸ்.சுமன்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் ஒன்றை அலட்சியப்படுத்தாது ஆராய்ந்ததன் பலனாக, இன்று உயிரிழந்த அப்பாவி சிறுமி ஒருவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வழி பிறந்திருக்கிறது. மாநிலத்தில் அது போன்ற வழக்குகளை போலீஸார் மீண்டும் தோண்டவும் காரணமாகி இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இரவு. உறங்குவதற்கு ஆயத்தமான முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அன்றைய தினம் தவற விட்ட அழைப்புகள், தகவல்கள் ஆகியவற்றை அலைபேசியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு வாட்ஸ் அப் தகவல் அவரது கவனத்தை ஈர்த்தது. தர்ரங் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை வழக்கு குறித்தான தகவல் அது. ஜூன் மாதம் நாளிதழ்களில் அந்த செய்தியை வாசித்தபோதே முதல்வருக்கு உறுத்தியது. இப்போது வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருக்கும் உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர், ’சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலைக்கு ஆளாகி இருப்பதாகவும், இந்த குற்ற சம்பவத்தை மறைத்ததில் மாவட்ட எஸ்பி முதல் மாஜிஸ்திரேட் வரை பெரிய கைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்’ தெரிவித்திருந்தார். முதல்வர் சர்மாக்கு தூக்கம் தொலைந்து போனது. அந்த அகால நேரத்திலும் மாநில டிஜிபி பாஸ்கர் ஜோதியை போனில் அழைத்தார். சில விபரங்களுக்கு உத்தரவிட்டார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

அடுத்த நாள் சிறுமி வழக்கு சிஐடி பிரிவின் சிறப்பு விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. வழக்கின் போக்கை முதல்வரிடம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் உத்தரவானது. முதல்வர் ஊகித்தது போலவே, சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்றும், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் சிஐடி பிரிவினர் தெரிவித்தனர். அது மட்டுமல்ல அந்த வழக்கில் மாவட்ட போலீஸ் எஸ்பி, ஏஎஸ்பி, நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய மாஜிஸ்திரேட் ஒருவர் மற்றும் 3 அரசு மருத்துவர்கள் என பலரும் வரிசையாக கைதுக்கு ஆளானார்கள். வழக்கின் போக்கை மாநில முதல்வரே கண்காணிக்கிறார் என்றதும் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருந்த உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு முதல்வர் சர்மா நேராக சென்றார். தங்கள் குழந்தைக்கு அநீதி நேர்ந்தது தொடர்பாக அந்த ஏழை பெற்றோர் அது நாள் வரை கூக்குரலிட்டு வந்ததை எவருமே செவிமெடுக்கவில்லை. நடந்தது தற்கொலைதான் என்று வழக்கையும் முடித்து விட்டார்கள். ஆனால் நீதி அவ்வளவு எளிதில் சாகாது என்பதை மாநில முதல்வரின் வடிவில் உணர்த்தியது. அந்த பரிதாப பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், விரைவில் உங்கள் மகள் சாவுக்கு நீதி கிடைக்கும் என்றார். அந்த சிறுமியின் குடும்பத்தினர் நடப்பதை நம்ப முடியாது கண்ணீர் விடுகின்றனர்.

சிறுமியின் வீட்டுக்கு விரையும் முதல்வர் வாகனம்

அவர்களது 13 வயது மகள் குடும்ப சூழல் காரணமாக கிருஷ்ண கமல் பருவா என்ற ராணுவ வீரர் வீட்டில் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டிருந்தார். சின்னப் பெண்ணை மிரட்டி சூறையாடிய ராணுவ வீரர் நடந்ததை எவரிடமும் சொல்லக் கூடாது என அச்சுறுத்தியும் வைத்திருந்தார். ஒரு நாள் வேதனை மாளாது அந்த சிறுமி, கமல் மனைவியிடம் சொல்லப்போவதாக அழுதார். அன்றைய தினம் அந்த சின்னப் பெண் சந்தேகத்துக்கு இடமாய் செத்துப்போனார். தற்கொலை என்று சோடிக்கப்பட்ட வழக்கில், காவல்துறை உயரதிகாரிகள் அரசு மருத்துவர்கள் ஆகியோருக்கு லட்சங்கள் வாரியிறைக்கப்பட்டன. தலை உடைக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலையான சிறுமியை, தற்கொலையில் இறந்ததாக மனசாட்சியின்றி அந்த அரசு ஊழியர்கள் ஆவணம் தயாரித்தார்கள். இவர்களுடன் மாஜிஸ்திரேட் ஒருவரும் சேர்ந்துகொண்டது வேதனை.

சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் கூராய்வு செய்ததில், அவர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டது நிரூபணமானது. தடய அறிவியல் சோதனைகள் சிலதும் குற்றவாளி கமலுக்கு எதிராக நின்றன. சிறுமியை சிதைத்து கொன்ற கமல், அந்த கொடூரத்தை தற்கொலை என சாதித்த 6 பேர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு முதல்வர் சர்மா அமைதியடையவில்லை. சமூக ஆர்வலர்கள் சிலர் கேட்டுக்கொண்டதை ஒட்டி, ’கடந்த ஒரு வருடத்தில் மாநிலத்தில் இது போன்ற சந்தேகத்துக்கு இடமான மரண வழக்குகள் அனைத்தையும் மற்றுமொருமுறை விசாரிக்க’ உத்தரவிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுமியின் ஆத்மா அநேகமாக சாந்தியடைந்திருக்கும்.

SCROLL FOR NEXT