க்ரைம்

சென்னை ரயில் விபத்தில் நடந்தது என்ன?- வெளியான அதிர்ச்சி தகவல்

காமதேனு

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில், திடீரென ரயில் தடம் புரண்டது ஏன்? என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் உள்பட 2 பெட்டிகளும், பிளாட்பாரத்தில் இருந்த 2 கடைகளும் சேதமடைந்தன. பயணிகள் இல்லாததால் உயிர் சேதமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மின்சார ரயிலை இயக்கிய ஓட்டுநர் மீது எழும்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில், கடற்கரை ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவின் கீழ் ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயிலை இயக்கிய போது பிரேக் செயல்படவில்லை என்பதால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் பவித்ரன் கூறியிருந்தார்.

இதனிடையே, பிரேக் செயல்படவில்லை என பவித்ரன் கூறியது தவறானது என்றும் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை கவனக்குறைவால் அழுத்தியதுதான் விபத்திற்கு காரணம் என்றும் ரயில்வே காவல் துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தபின், ஓட்டுநர் பவித்ரன் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT