க்ரைம்

வாகனத்திலிருந்து திடீரென குதித்த கைதி தப்பியோட்டம்... பதறிய போலீஸ்: சென்னையில் நடந்த சம்பவம்

காமதேனு

கரோனா பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி காவல் துறையின் வாகனத்திலிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அவரை திருவள்ளூர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அதே பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் இருந்து வந்துள்ள நிலையில், இது குறித்து விக்னேஷ் என்பவரிடம் தகவல் கேட்டுள்ளார். கஞ்சா போதையிலிருந்த விக்னேஷ், ஆத்திரமடைந்த நிலையில் நாகராஜைக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அப்பகுதியிலிருந்தவர்கள் படுகாமடைந்த நாகராஜை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நெற்குன்றம் 1-வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள் என்பவரின் மகன் பிரபு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் பாப்பாத்தி அம்மாள் வீட்டில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த விக்னேஷை காவல் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவருக்கு கரோனா பரிசோதனை செய்ய பூதூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாகனத்திலிருந்து விக்னேஷ் திடீரென குதித்து தப்பியோடியுள்ளார். கைதியை மடக்கிப் பிடிப்பதற்கு முயன்ற காவலர்கள், அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கேயே மூச்சிரைத்து நின்றுவிட்டார்கள். தப்பியோடிய விக்னேஷை சோழவரம் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT