கத்திக் குத்து
கத்திக் குத்து 
க்ரைம்

`நீ வந்திருந்தால் உன்னைக் கிழித்துத் தொங்கவிட்டு இருப்பேன்'- பள்ளியிலேயே மாணவனுக்கு நடந்த துயரம்

காமதேனு

ஒரு மாம்பழத்திற்காக விநாயகப் பெருமானும்- முருகப் பெருமானும் சண்டையிட்டுக் கொண்டதாக ஆன்மிக இதிகாசக் கதைகளில் படித்திருக்கிறோம். அதை விஞ்சும் வகையில் மாம்பழம் சாப்பிடும் போது, இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்துவரை சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஅள்ளி புதூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 14-ம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே மாம்பழம் சாப்பிடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி, “ நல்லவேளை இன்று நீ பள்ளிக்கு வரவில்லை. நீ வந்து இருந்தால் உன்னைக் கிழித்துத் தொங்க விட்டு இருப்பேன்“ என மாணவன் ஒருவர் சகமாணவனுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். மேலும், அந்த இரண்டு மாணவர்களும் நேற்று பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்த சக மாணவனின் தோள் பட்டையில் ஓங்கிக் குத்தினார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை ஆசிரியரின் புகாரின் பேரில் அங்கு வந்த காவேரிப்பட்டிணம் காவல் துறையினர் கத்தியால் குத்திய மாணவனைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பின்பு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அந்த மாணவர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT