அமைச்சர் செந்தில் பாலாஜி  
க்ரைம்

ஜாமீனுக்குப் போராடும் செந்தில் பாலாஜி.... நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்!

காமதேனு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று  அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி, மத்திய அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்14-ம் தேதி கைது செய்தனர். 

அப்போது அவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருந்த அவர், பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதுவரை இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார்.  இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருவதால், ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது.  இதையடுத்து, அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டது.

இறுதியாக கடந்த  11-ம் தேதி,  காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அத்துடன்,   ஜன.22-ம் தேதியன்று, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும், அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.அல்லி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இன்றுடன் அவரது  நீதிமன்றக் காவல்  முடிவடைகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் இன்று  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதுடன் வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில், ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை  எதுவும் இல்லை என்பதால் அவரது  ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனாலும், செந்தில் பாலாஜியின் முயற்சிகள் தொடர்கின்றன.

SCROLL FOR NEXT