பொற்கோயிலில் டிச.18 சம்பவம் நிகழ்ந்த வழிபாட்டு தலம்
பொற்கோயிலில் டிச.18 சம்பவம் நிகழ்ந்த வழிபாட்டு தலம்  
க்ரைம்

பஞ்சாபில் தொடரும் பதற்றம்: அவச்செயல் புகாரில் 2வது நபர் அடித்துக் கொலை

எஸ்.சுமன்

சீக்கியர்களின் புனித அடையாளங்களை அவமரியாதை செய்ததாக, பஞ்சாப்பில் 2வது நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலில் நேற்று(டிச.18) ஊடுருவிய ஒரு நபர், அவச்செயல் புரிந்ததாக அங்கேயே அடித்துக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2வது சம்பவமாக, இன்று காலை கபுர்தலா மாவட்டம் நிஜாமூர் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதி குருத்வாரா ஒன்றினுள் நுழைந்த அந்த நபர், நிஷான் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் புனிதக் கொடியை அவமரியாதை செய்தாராம். இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த நபரை தாக்கி உள்ளனர். விபரமறிந்து அங்கு சென்ற போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட நபரை மீட்டுள்ளனர். விசாரணைக்காக அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கேயே விசாரிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போலீஸாருடன் மோதினர். இதில் குற்றம்சாட்டப்பட்ட நபர் போலீஸார் கண்முன்பாகவே அடித்துக் கொல்லப்பட்டார்.

முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த ஒரு நபர், வழிபாட்டின் மத்தியில் சீக்கியர்களின் புனித நூல் மற்றும் புனித வாளை எடுக்க முயன்றிருக்கிறார். இதில் அங்கிருந்தவர்கள் அந்த நபரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கொலையானார்.

இதேபோல, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது, சீக்கியர்கள் புனித நூலுக்கு அவச்செயல் செய்ததாக, நிஹாங் பிரிவு சீக்கியர்களால் லக்பீர் சிங் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

நேற்றைய பொற்கோவில் சம்பவத்தை அடுத்து மாநில அரசு, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சீக்கியர்களின் புனித அடையாளங்களுக்கு அவச்செயல் புரிவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிய வருகிறது.

பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிம் வேளையில், சீக்கியர்களின் நம்பிக்கைகளை சீண்டும் விதத்தில் அரங்கேறும் மர்ம நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டாதா, அவற்றின் பின்னணி என்ன என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொற்கோவில் சம்பவத்தில் கிடைத்திருக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து, அங்கு ஊடுருவிய மர்ம நபர் குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT