விபத்துக்குள்ளான ஆட்டோ 
க்ரைம்

விசாகப்பட்டினம்; லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம் - அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

காமதேனு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

லாரி மீது மோதி கவிழும் ஆட்டோ...

விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோவானது சாலை சந்திப்பு பகுதியை அதிவேகமாக கடந்து செல்ல முயன்றதும், அப்போது பக்கவாட்டிலிருந்து வந்த லாரி மீது அதிகவேகத்தில் மோதி கவிழ்ந்ததும் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, ஆட்டோ டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

ஆட்டோ மோதிய லாரியானது விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டது. லாரி டிரைவரும், கிளீனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், அப்பகுதியில் இருந்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், அவர்கள் இருவரையும் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT