பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா 
க்ரைம்

சூடுபிடிக்கும் கர்நாடக பாலியல் புகார் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தைக்கு போலீஸ் சம்மன்

காமதேனு

பாலியல் வன்கொடுமை புகாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு கர்நாடகா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய எம்பி-யுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்த ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி அம்மாநில அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடகாவில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து நீக்கி அக்கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிபுரியும் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்துதல், பெண்ணின் கண்ணியத்தை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இவர்கள் இருவருக்கும் கர்நாடக காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா

ஆனால் பாலியல் சர்ச்சை விவகாரம் வெடித்த உடனேயே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததன் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அவர் மீது கைது போன்ற எந்த போலீஸ் நடவடிக்கையும் எடுக்காதது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT