க்ரைம்

ஓட்டலைக் கவனித்துக்கொள்ளச் சொன்ன ஓனர்: வீட்டையே கொள்ளையடித்த பரோட்டா மாஸ்டர்!

காமதேனு

சிகிச்சைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் உணவகத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட உரிமையாளரின் வீட்டையே புரோட்டா மாஸ்டர் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன்(50). இவர் திருச்செங்கோடு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். அண்மையில் நடேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்குச் சேர்ந்திருந்தார்.

அப்போது தன் உணவகத்தில் மாஸ்டராக வேலைசெய்யும் விஜயகுமார்(35) என்பவரிடம் கடையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிச் சென்றார். விஜயகுமார் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையைச் சேர்ந்தவர். நீண்டகாலமாக நடேசனின் உணவகத்தில் தங்கியிருந்து வேலைசெய்ததால் அவரை நம்பி இந்தப் பொறுப்பை நடேசன் ஒப்படைத்தார்.

ஆனால், சிகிச்சை முடிந்து நடேசன் வீடு திரும்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 35 பவுன் நகை மாயமாகியிருந்தன. பரோட்டா மாஸ்டர் விஜயகுமாரும் மாயமாகி இருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு போலீஸார் குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பதுங்கியிருந்த விஜயகுமாரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டன. விஜயகுமார் திருச்செங்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT