சிவசங்கர் பாபா 
க்ரைம்

விசாரணைக்கு தடையில்லை... குற்றம்சாட்டிய மாணவி ஆஜராக உத்தரவு! சிவசங்கர் பாபா வழக்கில் அடுத்த மூவ்

காமதேனு

பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தும்படி சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ம் ஆண்டு புகார்கள் அளிக்கப்பட்டன.  இந்த புகார்களின் அடிப்படையில்  சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2007ம் ஆண்டு சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவி 2021ம் ஆண்டு புகாரளித்ததாக காவல்துறை கூறுவதாக தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

ஆனால் தற்போது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், மின்னஞ்சல் மூலமாக புகாரளித்ததாக கூறப்படும் நிலையில் புகாரின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுவதாகவும் கூறினார். இதனையடுத்து, புகாரளித்த மாணவியை செப்டம்பர் 15ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யுமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT