க்ரைம்

கோடநாடு விவகாரம்: ஆறுகுட்டியிடம் தீவிர விசாரணை

காமதேனு

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக கோவையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக கவுடண்டம்பாளையம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அவரிடம் கோவையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரை காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீஸார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ், ஆறுக்குட்டியிடம் ஓட்டுநராக பணியாற்றியவர். இதன் அடிப்படையிலும் கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் ஆறுக்குட்டியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT