அமீர் சர்பராஸ் தம்பா - சரப்ஜித் சிங் 
க்ரைம்

தொடரும் மர்ம மரணங்கள்... சரப்ஜித் சிங்கை அடித்துக் கொன்ற லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

காமதேனு

பாகிஸ்தான் சிறையில் அடைபட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங் என்பவரை அடித்துக்கொன்ற, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியான அமீர் சர்பராஸ் தம்பா என்பவர் ’மர்ம நபர்களால்’ இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஞ்சாபில் உள்ள பிகிவிண்ட் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரப்ஜித் சிங். குடிபோதையில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இவர், 1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டார். அந்த குண்டுவெடிப்பில் இந்தியாவின் பின்னணி இருந்ததாக, சரப்ஜித் சிங்கை முன்வைத்து பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்தியா அதனை கடுமையாக மறுத்தது.

சரப்ஜித் சிங்

பாகிஸ்தான் நீதிமன்றம் சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை விதித்தது. லாகூரின் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்குக்கு, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் எழுந்தது. சக கைதிகளால் செங்கல் மற்றும் கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதில், ஒரு வார காலத்துக்கு கோமாவில் கிடந்து மாரடைப்பில் 2013, மே 20 அன்று லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் இறந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் தவித்த சரப்ஜித் சிங், கொலையானதன் பின்னணியில் அமீர் சர்பராஸ் தம்பா என்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய நபர் இருந்தார். இவர் 26/11 மும்பை பயங்கவாரதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் என்பவரின் கூட்டாளி ஆவார். இந்த அமீர் சர்பராஸ் தம்பா இன்றைய தினம் அடையாளம் அறியப்படாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரா

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதி கொல்லப்பட்டதற்கு வழக்கம்போல, இந்திய உளவு ஏஜெண்டுகள் மீது பழி விழுந்துள்ளது. அண்மைக் காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானில் குறிவைத்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் 20க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டதாகவும், இதில் இந்தியாவின் ’ரா’ உளவு அதிகாரிகளின் கைங்கர்யம் இருப்பதாகவும் கடந்த வாரம் இங்கிலாந்து நாளிதழான தி கார்டியன் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை இந்தியா வன்மையாக மறுத்துள்ளது.

SCROLL FOR NEXT