தேர்வு அறையில் செல்ஃபோன் 
க்ரைம்

தேர்வு அறையில் செல்ஃபோன் உடன் சிக்கிய பிடெக் மாணவன்; 8-வது மாடியிலிருந்து எகிறி குதித்ததில் நேர்ந்த பரிதாபம்

காமதேனு

பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவன், தேர்வு அறையில் செல்ஃபோன் உடன் பிடிபட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாகம் நெருக்கியதில், அந்த மாணவர் எட்டாவது மாடியிலிருந்து எகிறிக் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூருவை சேர்ந்த ஆதித்யா பிரபு என்ற 19 வயது மாணவர், பன்னர்கட்டா பகுதியில் வீடு எடுத்து தங்கியபடி, ஹொசகேரஹள்ளி பல்கலைக்கழகத்தில் பிடெக் முதலாமாண்டு பயின்று வந்தார். பல்கலைக்கழகத்தின் முதல் செமஸ்டர் தேர்வுகளை முன்னிட்டு தேர்வுக் கூடத்தில் ஆதித்ய பிரபுவும் நேற்று அமர்ந்திருந்தார்.

அப்போது தேர்வறை கண்காணிப்பாளர் கவனத்தை ஆதித்ய பிரபு கவர்ந்தார். மாணவனின் வித்தியாசமான செய்கையை ரகசியமாக கண்காணித்தபோது, ஆதித்ய பிரபு செல்ஃபோன் ஒன்றை மறைத்துப் பயன்படுத்தி தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்வறை கண்காணிப்பாளர் கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்தார்.

முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் ஆதித்ய பிரபுவை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விசாரித்தனர். அதில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதை மாணவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பெற்றோருக்கு தகவல் தருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த ஆதித்ய பிரபு, நேராக எட்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து எகிறிக் குதித்தார். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார். இதற்கிடையே மகன் ஆதித்ய பிரபுவின் சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தினரே காரணம் என குற்றம்சாட்டி, அவரது தந்தை கணேஷ் பிரபு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், மகனை தற்கொலைக்கு தள்ளியதாகவும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர் விசாரணை கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT