க்ரைம்

நீதிபதிகளை மிரட்டிய வழக்கில் 7 பேர் முன்ஜாமீன் மனு தாக்கல்

கி.மகாராஜன்

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 7 பேர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை, மார்ச் 30-க்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனி உமர்கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களில், ‘ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் மார்ச் 18-ல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக, திருவாடனை போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”மனுதாரர்கள் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எம்.தெளபீக், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதனால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்றார்.

மனுதாரர்கள் தரப்பில், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து. விசாரணையை மார்ச் 30-க்கு ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கில் போலீஸார் நடவடிக்கையைத் தொடரலாம் என்றும், போலீஸ் நடவடிக்கைக்கு இந்த மனுக்கள் நிலுவையில் இருப்பது தடையில்லை என்றும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT