க்ரைம்

மண்ணில் சிக்கிய ஊழியர்... மீட்கும்போது துண்டிக்கப்பட்ட தலை: ஜேசிபி இயந்திரத்தால் நடந்த விபரீதம்

காமதேனு

மண் சரிவில் சிக்கிய பணியாளரை பொக்லைன் மூலம் மீட்க முயன்ற போது தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான விளாங்குடி அருகே பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பதிக்கும் பணியானது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் 3 தொழிலாளர்கள் அதற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான ஈரோடு மாவட்டம் அமராவதியைச் சேர்ந்த வீரணன் என்ற சுரேஷ் மண் சரிவில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அவரை மீட்கும் பொருட்டு, பொக்லைன் மூலமாக மண்ணை அள்ளி மீட்க முயன்றுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக பொக்லைனில் ஊழியரின் தலை சிக்கி தனியாக துண்டிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மேயர் இந்திராணி மற்றும் ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மண்ணில் புதைந்திருந்த ஊழியர் வீரணனின் உடலை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த வீரணனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவரை பார்த்துவிட்டு சென்றதும், வீடு சென்று சேருவதற்குள் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு, ஜேசிபி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொழிலாளி மண் சரிவில் சிக்கும் போதே உயிரிழந்தாரா அல்லது பொக்லைன் மூலம் தலை துண்டிக்கப்பட்டதால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரையில், கடந்த ஏப்ரல் மாதம் கழிவுநீர் தொட்டி தூய்மை பணியின்போது 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போது, ஊழியர் ஒருவர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மதுரை மாநகராட்சி தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்று அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் மாநகராட்சி நிர்வாகம் திணறி உள்ளனர்.

SCROLL FOR NEXT