க்ரைம்

தீவனங்களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு: போலீஸைப் பதற வைத்த விவசாயி!

கி.பார்த்திபன்

மாட்டுத் தீவனப் பயிருக்கு நடுவே கஞ்சாவை ஊடுபயிராக வளர்த்த விவசாயி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மாட்டுத்தீவனப் பயிருக்குள் ஊடு பயிராக கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அளுக்குளி அருகே உள்ள காசியூரில் வேலுச்சாமி (எ) ராமசாமி என்பவரின் தோட்டத்திற்குள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாட்டுத் தீவனப் பயிர்களுக்கு நடுவில் ஊடுபயிராக சுமார் 8 அடி உயரத்தில் 30 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் கடத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா செடிகளைப் பறித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனைப் பயிரிட்ட விவசாயி வேலுச்சாமி (எ) ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊடு பயிராக கஞ்சாவை விவசாயி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT